அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபர் ஜோ பிடனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தற்போதைய டிரம்ப் ஆதரவாளர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஒரு பெண் பலியானார். தள்ளுமுள்ளுவில் 3 பேர் பலியாயினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.

இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், இவரது வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. ஆனால் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

இதில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். இதற்கிடையில், ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது.

இதற்கான இரு அவையின் கூட்டு கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பிடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதிபர் மாளிகையில் இருந்து சுமார் 2 மைல் தொலைவில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

அப்போது, அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், கைகளில் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டு கொண்டு, தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்து கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் இது போல ஒரு மோசமான நிகழ்வு நடைபெற்றது கிடையாது என்று அந்த நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அப்போது அவர்களுக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்ததால்  பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டது. துணை அதிபர் மைக் பென்ஸ் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதர உறுப்பினர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். சிறிது நேரத்தில், திடீரென அப்பகுதியில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முற்றுகையிட்டவர்களை வெளியேற்ற போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் மீது குண்டு பாய்ந்தது.

படுகாயமடைந்த அவர்,  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

மேலும் 3 பேர் தள்ளுமுள்ளு காரணமாக  இறந்தனர். இந்த சம்பவத்தில் சில போலீசாரும் காயமடைந்தனர்.

பின்னர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் பூட்டப்பட்டது. நிலைமை மோசமானதால், ட்ரம்ப் வழிகாட்டுதலின் பேரில், தேசிய காவலர் மற்றும் பாதுகாப்பு படையினர் வாஷிங்டனுக்கு விரைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, எந்தவொரு நகர சாலையிலும் அல்லது பொது இடத்திலும் கார், பைக் அல்லது பிற போக்குவரத்து மூலம் பயணம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது என்று, மேயர் பவுசர் தெரிவித்தார்.

இதனிடையே ட்ரம்ப் தனது ட்விட்டரில் “இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல்.

இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். நமக்கு அமைதி வேண்டும்.

நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள் சர்ச்சைக்குரியது என்றும், அவரது வீடியோவை கட்டுப்படுத்துவது எனவும் ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த பதிவு வன்முறைக்கு வித்திடும் எனவும், அதற்கு பதிலளிக்கவோ அல்லது மீள் பதிவிடவோ முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற முற்றுகையின்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசியதின் வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம், தனது தளத்திலிருந்து நீக்கியது.

இது வன்முறையின் அபாயத்தை குறைப்பதற்கு பதிலாக தூண்டும் வகையில் இருப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டு துணைத் தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாக அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘நவீன காலத்தில் இதுபோன்ற தாக்குதலை நாம் பார்த்ததில்லை. சுதந்திரத்தின் மீதான தாக்குதல்.

மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க சத்திய பிரமாணம் செய்த நாடாளுமன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. ட்ரம்ப் தனது உறுதிமொழியை நிறைவேற்றவும், அரசியலமைப்பை காக்கவும் நாடாளுமன்ற முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றுமாறு ட்ரம்ப்பை கேட்டு கொள்வதாக பைடன் கூறியிருக்கிறார். இந்நிலையில், சுமார் 6 மணி நேரத்துக்கு பின், போராட்டம் கட்டுக்குள் வரப்பட்டது.

இதையடுத்து பிடனுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறை நடந்து வருகிறது.

மோடி, உலக தலைவர்கள் கண்டனம்
இந்த வன்முறைக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாஷிங்டனில் நடைபெறும் வன்முறை தொடர்பான செய்திகள் வேதனை அளிக்கிறது.

அமைதியான வழியில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும். சட்ட விரோதமான போராட்டங்கள் மூலம் ஜனநாயக நடைமுறைகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

நார்வோஜியன் பிரதமர் எர்னா சோல்பெர்க் கூறுகையில், ‘வாஷிங்டனில் நாம் பார்ப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

இந்த வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதிபர் டிரம்பிற்கு உள்ளது. வன்முறை புகைப்படங்களை பார்க்கும் போதே அச்சத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.

ஐரிஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் சைமன் கோவினே கூறுகையில், வன்முறையில் நடந்தது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.

ஒரு அதிபர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஜனநாயகத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் இது.

நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடந்த தேர்தல் முடிவுகளை சிதைக்க நடந்த முயற்சியாகும். உலகமே உற்று நோக்குகிறது என்பதை மறவாதீர்கள்.

அமைதி திரும்பும் என நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளார். டச்சு பிரதமர் மார்க் ருட்டே நேரடியாக டிரம்பை விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்னில் நடந்த வன்முறைகள் மிகவும் கொடூரமானவை. அன்பான டொனால்ட் டிரம்பே, நீங்கள் அடுத்த அதிபர் ஜோ பிடன்தான் என்பதை இன்றாவது அங்கீகரிக்க வேண்டும்’ என்றார்.

‘இது அமெரிக்காவே அல்ல’ என ஐரோப்பிய தூதரக பிரதிநிதி ஜோசப் போரல் தெரிவித்துள்ளார். அதேபோல ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, கொலம்பியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் முடக்கம்
டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார்.

அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையிலான அந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள், தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கியது.

குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்விட்டர் பக்கமான @realDonaldTrump பக்கத்திலிருந்து சில ட்விட்டுகள் செய்தார்.அவைகள், வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை ட்விட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

அடுத்த 12 மணி நேரம் டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


.

மூலக்கதை