கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல்... தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் கண்காணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல்... தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் கண்காணிப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் மர்மமாக இறந்ததால் அம்மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

கடந்தாண்டு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாடே முடங்கி போன நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழலில் பறவை காய்ச்சல் நோய் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.   இன்றைய நிலையில், ராஜஸ்தானில் 425 பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளதாக  கால்நடை பராமரிப்புத்துறை கூறி உள்ளது.

அதிகளவில் காக்கைகள், ஹெரோன்கள் மற்றும் பிற பறவைகள் இறந்துள்ளன. மாநிலம் முழுவதும் 15  மாவட்டங்களில் பறவைகள் இறப்பு  பதிவாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்து  வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேபோல பறவைகள்  அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், இடப்பெயர்ந்து செல்லும் பல  பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய  பகுதி  சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன. இதையடுத்து கேரளா,  ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து பறவை காய்ச்சல் அறியப்பட்ட 4வது  மாநிலமாக இமாசலபிரதேசம் இடம் பெற்றுள்ளது.

இறந்த பறவைகளின்  மாதிரிகள் பரிசோதனைக்காக போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், மற்ற மாநிலங்களில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.



கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாத்துகள், கோழிகள் மற்றும் பிற உள்நாட்டு பறவைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ‘எச்5 என்8’ வைரஸ்  பரவாமல் தடுக்க சுமார் 40,000 பறவைகள் கொல்ல வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோட்டையம் அடுத்த ஸ்லீப்பூரில் உள்ள வாத்து வளர்ப்பு மையத்தில் சுமார் 1,500 வாத்துகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளன என்று  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு மாநில அரசுக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் வாத்துகளை பறவை காய்ச்சல் தாக்கியதைடுத்து நாமக்கல்லில் கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மண்டல கால்நடை பராமரிப்பு துறை எடுத்து வருகிறது.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தமிழக -  கேரள எல்லையில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


.

மூலக்கதை