ரூ. 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ. 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் சார்பில் ரூ. 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில், உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு  அளித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது.

இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டிய பகுதியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற  திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 971 கோடியாகும்.

21 மாதங்களில் அதாவது 2022ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதத்துக்குள் 75வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். இதற்கிடையே மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி ராஜீவ் சூரி உள்ளிட்ட சிலர்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இதனை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்துக்கு  எந்தவிதமான தடையும் இல்லை; புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தலாம்’ என்று அனுமதியளித்தது.

மேலும், ‘மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் வரை, எவ்விதமான கட்டுமானத்தையும் இடிக்கமாட்டோம். கட்டுமானம் ஏதும் கட்டப்படாது’ என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த டிச. 10ம் தேதி நடைபெற்றது.

பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம்  கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ. எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு நிலையில், இன்று ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஏ. எம். கான்வில்கர், மற்ற  நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

எவ்வித தடையும் இல்லை. காற்று மாசுப்படுவதை தடுக்க செயற்கை கோபுரங்கள்  அமைக்க வேண்டும்.

நாட்டின் புராதன சின்னங்களை நிர்வகிக்கும் அமைப்பிடம் முறையான அனுமதி பெற வேண்டும். திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்’ என்று அறிவித்தனர்.

ஆனால், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த தீர்ப்பில், ‘இத்திட்டத்தை நிறைவேற்ற சுற்றுச்சூழல் தொடர்பான சந்தேகங்களை எப்படி சரிசெய்ய முடியும்? அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா?’ என்று கேள்வி  எழுப்பினார்.

தீர்ப்பில் இவரது கருத்து முக்கியதுவமாக பார்க்கப்பட்டாலும், புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை கட்டுவதற்கு இவர் எவ்வித தடையும் விதிக்கவில்லை. மேலும், தனது சந்தேகங்களை வெளிப்படுத்தி உள்ளதால், 3ல் 2 நீதிபதிகள் ஒருமித்த கருத்தை தெரிவித்ததின் அடிப்படையிலும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்படி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு எவ்வித தடையும்  விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றமே அனுமதி அளித்துள்ளதால், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை