முன்னுரிமை பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் விநியோகம் தனியார் மருத்துவமனைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி சப்ளை: சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னுரிமை பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் விநியோகம் தனியார் மருத்துவமனைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி சப்ளை: சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

மும்பை: ஒரு வாரத்தில், முன்னுரிமை பெற்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு மார்ச் மாதம் அளிக்கப்படும் என்றும் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் (பாரத் பயோடெக்குடன் இணைந்து ஐசிஎம்ஆர்), கோவிஷீல்ட்டை (அஸ்ட்ராஜெனெகா - ஆக்ஸ்போர்டு  இணைந்து சீரம் தயாரிப்பு) அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதை அடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.



வரும் சில நாட்களில் முன்களப் பணியாளர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகமுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் முன்னுரிமை பெற்ற மக்களுக்கு மட்டுமின்றி, தனி நபர்களுக்கும் கட்டண விலையில் சப்ளை ெசய்யவுள்ளது.

இந்நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியானது முதற்கட்டமாக 50 முதல் 60 மில்லியன் டோஸை வழங்கிய பின்னர், வரும் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தனி நபர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தடுப்பூசியை சப்ளை செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
இவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சீரம் நிறுவன தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டி. சி. ஜி. ஐ) ஒப்புதல் அளித்ததை அடுத்து, தடுப்பூசி விநியோகம் விரைவில் தொடங்கும்.

எங்கள் நிறுவனம் முதற்கட்டமாக மத்திய அரசு கோரிய அளவிற்கு தடுப்பூசி டோஸ்களை சப்ளை செய்யும்.

அதன்பின்னர் தனியாருக்கு கிடைக்கும். எங்களது நிறுவன தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

தற்ேபாது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால், அதன் மீதான நம்பிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் இருந்து முறையான ஒப்புதல் கிடைக்கும்.

அதனை தொடர்ந்து இந்த வாரம் முதல் (7 முதல் 10 நாட்களுக்குள்) தடுப்பூசி விநியோகம் இருக்கும். ஒரு மாதத்தில் 50 முதல் 60 மில்லியன் (6 கோடி) டோஸ் அல்லது வாரத்திற்கு 10 முதல் 15 மில்லியன் டோஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.



இதில் மத்திய அரசு தலா ஒரு தடுப்பூசியை சுமார் 200 ரூபாய் அளவிற்கு வாங்குகிறது. இந்த விலையானது முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் சந்தைக்கு விற்பனைக்கு வரும்போது ஒரு டோஸ் தடுப்பூசியானது தலா ரூ. 1,000 மதிப்பில் விலை நிர்ணயிக்கப்படும். தனியாருக்கு தடுப்பூசி விநியோகத்திற்கான இறுதி உத்தரவு மற்றும் முறையான கடிதம் இன்னும் எங்களது கைக்கு கிடைக்கவில்லை.

அதற்காக காத்திருக்கிறோம். பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவைப்படுபவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான பட்டியலை சுகாதாரத் துறை தயாரித்துள்ளது.


அவர்களின் தேவைக்கு ஏற்ப, மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த தடுப்பூசி மருந்தானது இரண்டு தவணைகளில் போட வேண்டும்.

அதாவது நாங்கள் இரண்டரை மாதங்கள் இடைவெளியை பரிந்துரைக்கிறோம். ஏனெனில் 90 சதவீதம் முழு செயல்திறனை எடுக்க அவ்வளவு காலம் தேவைப்படும்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காத்திருந்தால், முழு செயல்திறனும் கிடைக்கும். இதனை நிரூபிக்கும் வகையிலான முழுவிபரங்கள் தடுப்பூசி வழங்கிய அடுத்த இரண்டு மாதங்களில் தெரிவிக்கப்படும்.

சீரம் தடுப்பூசியின் ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறன் 70. 42% என்று டி. சி. ஜி. ஐ தெரிவித்துள்ளது’ என்றார்.

.

மூலக்கதை