நாடு முழுவதும் அவசரகால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் அவசரகால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் அவசரகால பயன்பாட்டுக்காக மக்களுக்கு விநியோகம் ெசய்வதற்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அதிகாரபூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை, வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஓரிரு நாளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

கொரோனா தொற்று கடந்த ஓராண்டுக்கு முன் பரவத் தொடங்கியதில் இருந்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் பல நாடுகள் இறங்கின. இந்தியாவில் தடுப்பூசிகளின் தன்மைகள் மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு, இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்டிராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கியது.

அந்த மருந்தை இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது.

இந்த மருந்தை அவசரகால தேவைக்குப் பயன்படுத்துவதற்கு நேற்றுமுன்தினம் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது. இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கும் நிபுணர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பூசியை உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரத் தேவைக்கு மட்டும் அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதுமட்டுமின்றி ‘கேடிலா’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனைக்கும் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, தடுப்பூசியை மக்களுக்கு குழப்பம் எதுவும் இன்றி விரைவாக கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் நேற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

இது வெற்றிகரமாக அமைந்ததால், மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. முன்னதாக தடுப்பூசி போடுவதற்காக சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தடுப்பூசி செலுத்தும் பணியானது, இந்திய தேர்தல் செயல்முறைகளின் அடிப்படையில், வாக்குச்சாவடி வாரியாக மேற்கொள்ளப்பட உள்ளது. நாடு முழுவதும் 719 மாவட்டங்களில் 57,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயிற்சியை முடித்துள்ளனர்.



தடுப்பூசி போடுவதற்காக 96,000 பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மிகப்பெரிய கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியை மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த உள்ள, முன்னுரிமை பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமான ‘கோவின்’ உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி (டிசிஜிஐ) டாக்டர் வி. ஜி. சோமானி கூறுகையில், ‘கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் 70 சதவீதம் திறன்மிக்கது.

இரு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்காக மக்களுக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இறுதி அனுமதி அளித்துள்ளது.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இந்த தடுப்பூசிகள் குறித்த பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு தவணையாக வழங்கப்படும்.

‘கேடிலா’ மூன்று தவணையாக வழங்கப்படும்’ என்றார்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரபூர்வ அனுமதி வழங்கி உள்ளதால், வரும் ஒருசில நாட்களில் அனைத்து மாநிலங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஆய்வகங்களில் இருந்து தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விரிவான ஏற்பாடுகளுடன் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை