ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு

வாஷிங்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக 14 மூத்த சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார். இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்த ஹாங்காங்கை 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது.

அதையடுத்து சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா அடாவடி செய்கிறது.

குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு கொடிய சட்டத்தை ஹாங்காங்கில் கொண்டு வந்துள்ளது.

அதை எதிர்த்து போராடுகிறவர்களை ஒடுக்குகிறது.

அதனால், சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் அணி திரண்டுள்ளன. இந்நிலையில், ஹாங்காங்கின் சுயாட்சியை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஒரு திபெத்தியர் உட்பட 14 மூத்த சீன அதிகாரிகளை அமெரிக்கா தடை செய்தது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘ஹாங்காங் மக்கள் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் 14 மூத்த சீன அதிகாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கான விசாமீது கட்டுப்பாடுகள், பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின்படி, இந்த 14 மூத்த சீன அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கா வர தடை விதிக்கப்படுகிறது’ என்றார். ஏற்கனவே கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே இதுபோன்று சில சீன அதிகாரிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.

சீனாவின் மிகப்பெரிய சிப் செயலி நிறுவனமான எஸ். எம். ஐ. சி மற்றும் எண்ணெய் நிறுவனமான சி. என். ஓ. சி உள்ளிட்ட நான்கு நிறுவனங்களை அமெரிக்கா தடுப்புப்பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை