உலகில் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்ட ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி விநியோகம் தொடங்கியது: மாஸ்கோவில் ஆர்வமுடன் போட்டுக் கொண்ட மக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகில் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்ட ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்  5’ தடுப்பூசி விநியோகம் தொடங்கியது: மாஸ்கோவில் ஆர்வமுடன் போட்டுக் கொண்ட மக்கள்

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று பொதுமக்களுக்கு ஸ்புட்னிக் - 5 எனப்படும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்  தொடங்கியது. இந்த தடுப்பூசியை மக்கள் ஆர்முடன் போட்டுக் கொண்டனர்.

ரஷ்யா  உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச்  செலுத்தும் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று, அந்நாட்டு  அதிகாரிகளுக்கு அதிபர் புதின் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டார். அதன்  தொடர்ச்சியாக, மாஸ்கோவில் 70 கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை அதிகாரிகள் நேற்று  தொடங்கினர்.

முதல்கட்டமாக  70 கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட  நோய்த்தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

உலகில் பல்வேறு நாடுகளில் சோதிக்கப்பட்டு வரும் கொரோனா  தடுப்பூசிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அங்கீகாரம் முதல்முறையாக  ஸ்புட்னிக் - 5 மருந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் ஐந்து மணி நேரத்தில், 5,000 பேர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார். இந்த தடுப்பூசி 60 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றும், கடுமையான உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடந்த இரண்டு வாரங்களாக சுவாச நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியானது இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. அதாவது முதன்முறையாக வழங்கப்பட்டு நாளில் இருந்து அடுத்த 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறை போடப்படும்.

ஸ்பூட்னிக் - 5 தடுப்பூசி மற்றுமின்றி மற்ெறாரு தடுப்பூசியையும் ரஷ்யா உருவாக்கியுள்ளது. இருப்பினும், இவற்றின் இறுதி பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை.

இருந்தும், போதுமான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் பெரிய அளவிலான தடுப்பூசி விநியோகத்தை ரஷ்யா தொடங்கி உள்ளதற்கு ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவசரகால அங்கீகாரம் கொடுங்க!
உலகப் புகழ்பெற்ற ஃபைசர் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில்  அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த வசதியாக அந்நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

ஃபைசர் தடுப்பூசி, பல்வேறு சோதனைகளில் 95 சதவீத முடிவுகளை சாதகமாக கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இந்தியாவில் தடுப்பூசி விநியோகிக்க உடனடி அனுமதி பெற ஃபைசர் நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே, பிரிட்டனும், பஹ்ரைனும் ஃபைசருக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான சவால் என்னவென்றால், தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டும் என்பதுதான்.

இந்நிலையில், இந்தியாவில் ஐந்து விதமான கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இவற்றில், பாரத் பயோடெக் தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஆகியவை இறுதி கட்ட சோதனையில் உள்ளன.

அடுத்த சில வாரங்களில் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை