டிச.,13ல் தமிழகம் வருகிறார் பிரதமர்?

தினமலர்  தினமலர்
டிச.,13ல் தமிழகம் வருகிறார் பிரதமர்?

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி டிச., 13ல் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்; அரசு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் சட்டசபை தேர்தலில் பா.ஜ. உடனான கூட்டணி தொடரும் என முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர்.அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசித்தார். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். அவர் வந்து சென்ற பின் ரஜினி கட்சி துவக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு விழாவில் பங்கேற்பதற்காக டிச., 13ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் பகலில் விமானத்தில் சென்னை வருகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்கிறார். அங்கு விழாவில் பங்கேற்கிறார்.அப்போது பிரதமரை முதல்வரும். துணை முதல்வரும் சந்தித்துப் பேசுகின்றனர். நடிகர் ரஜினியும் சந்தித்து பேசலாம் என தெரிகிறது.

அதன்பின் பிரதமர் டில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகள் கூறுகையில் 'பிரதமர் அலுவலகத்தில் இருந்து பயண விபரம் இன்னமும் வரவில்லை' என்றனர்.

மூலக்கதை