தமிழகம், புதுவையில் இன்றும் பலத்த மழை தொடரும்!

தினமலர்  தினமலர்
தமிழகம், புதுவையில் இன்றும் பலத்த மழை தொடரும்!

சென்னை: 'புரெவி' புயலின் தாக்கத்தால், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில்,
அதீத கன மழை கொட்டி தீர்த்துள்ள நிலையில், தமிழகம், புதுவையில், இன்றும் பலத்த மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 34 செ.மீ., மழை பெய்ததால், சிதம்பரம் நடராஜர் கோவில், தண்ணீரில் மிதக்கிறது.

ஒரு நாள் மழையில், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியதால், பல கிராமங்களில் வீடுகள், வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.வங்கக் கடலில் உருவான, புரெவி புயல், தென் மாவட்டங்களில், மிக கன மழையை கொடுக்கும் என, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது.ஆனால், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை நோக்கி, புயலின் தாக்கம் திசை திரும்பி விட்டது. இந்த புயல், மன்னார் வளைகுடா அருகே வந்தபோது வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அதனால், காற்றின் வேகம் குறைந்து, டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் வரையிலான வட மாவட்டங்களிலும், விடிய விடிய மழை கொட்டியது. இப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.

கோவிலில் வெள்ளம்கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், 34 செ.மீ. மழை கொட்டியதில், நடராஜர் கோவில் வளாகத்துக்குள், சன்னிதியை சுற்றியும், உள் பிரகாரங்களிலும், மழை வெள்ளம் புகுந்தது. அதனால், பக்தர்கள் இடுப்பளவு நீரில் தத்தளித்தபடி, உள்ளே வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை, மயூரநாதர் கோவில் வளாகத்துக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. தஞ்சையில், சம்பை பட்டினம் என்ற இடத்தில், ஏரி உடைந்து, நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், முக்கூடல் பகுதியில் ஏரி மதகு உடைந்து, கிராமங்கள், விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் பாய்ந்துள்ளது.

விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் பரப்பிலான வாழை, நெல் பயிர்களை, தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல கிராமங்களில், ஆயிரக்கணக்கான கால்நடைகள், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன.சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், பெரும்பாலான சாலைகள் மழை நீர் தேங்கி, மேடு, பள்ளமாக காட்சி அளிக்கின்றன. அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. சென்னையில், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து, உபரி நீர், அதன் வடிகால்களில் திறந்து விடப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை தொடருமாம்இந்நிலையில், பலத்த மழை, இன்றும் தொடரும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 11 இடங்களில், 20 செ.மீ.,க்கு மேலாக, அதீத கன மழையும்; 20 இடங்களில், 20 செ.மீ., அளவிலும்; 50க்கும் மேற்பட்ட இடங்களில், 12 செ.மீ., வரையிலும் கன மழை பெய்துள்ளது. மன்னார் வளைகுடா அருகில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு கேரளாவை அடையும். அப்போது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். காற்றழுத்தம் நகரும் மாவட்டங்களில், மணிக்கு, 60 கி.மீ., வேகம் வரை, பலத்த காற்று வீசும்; பலத்த மழை பெய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இன்று மழை பெய்யும் இடங்கள்நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யும். சூறாவளி காற்று வீசுவதால், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு, இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


100 ஆண்டுகளில் இல்லாத மழை!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த, புரெவி புயலின் வடக்கு பகுதியில், அடர்த்தியாக இருந்த காற்றழுத்தம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல், அதீத கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக, நாகை மாவட்டம், கொள்ளிடத்தில் ஒரே நாளில், 36 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், சீர்காழி மற்றும் கொள்ளிடத்தை சுற்றிய பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன. கொள்ளிடத்தை பொறுத்தவரை, 1918ம் ஆண்டு நவம்பர், 18ல், 36 செ.மீ., மழை கொட்டியுள்ளது. அதன்பின், அதாவது, 100 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், ஒரே நாளில், 36 செ.மீ., மழை பெய்துள்ளதாக,வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலக்கை எட்டிய பருவ மழைதமிழகத்தில், அக்டோபர், 1 முதல், நேற்று வரை சராசரியாக, 36 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, சராசரியான, 37 செ.மீட்டரை விட, 2 சதவீதம் குறைவு. நேற்று முன்தினம் வரை, 16 சதவீதம் மழை பற்றாக்குறை இருந்த நிலையில், ஒரே நாளில், பற்றாக்குறையின் அளவு, 2 சதவீதமாக குறைந்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

கொள்ளிடம், 36; சிதம்பரம், 34; லால்பேட்டை, 28; பரங்கிப்பேட்டை, 26; மணல்மேடு, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, 25; திருத்துறைப்பூண்டி, 22; சீர்காழி, குடவாசல், சேத்தியாதோப்பு, 21; ராமேஸ்வரம், 20 செ.மீ., மழை பெய்துள்ளது.

பேராவூரணி, மஞ்சளாறு, புவனகிரி, மயிலாடுதுறை, 19; கறம்பக்குடி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, 17; மதுக்கூர், திருக்கழுகுன்றம், 16; விருத்தாசலம், 15; திண்டிவனம், நன்னிலம், தஞ்சை பாபநாசம், புதுச்சேரி, திருவிடைமருதுார், 14 செ.மீ., மழை பெய்துள்ளது.

கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவாரூர், உளுந்துார்பேட்டை, 13; ஆடுதுறை, ஆலங்குடி, பாண்டவையாறு, 12; ஜெயங்கொண்டம், மன்னார்குடி, 11; பெரம்பலுார், மதுராந்தகம், நீடாமங்கலம், 10; செந்துறை, விழுப்புரம், சோழவரம், கந்தர்வக்கோட்டை, செங்கல்பட்டு, செஞ்சி, 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


கும்மிடிப்பூண்டி, திருக்கோவிலுார், 8; அரியலுார், ஊத்துக்கோட்டை, சென்னை அண்ணா பல்கலை, பாம்பன், காரைக்கால், திருச்சி, 7; முத்துப்பேட்டை, சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலையம், செம்பரம்பாக்கம், அம்பத்துார், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.


மூலக்கதை