இந்தியா யாரென்று தெரிகிறதா * நடராஜன் ‘தீயென்று’ புரிகிறதா... | டிசம்பர் 04, 2020

தினமலர்  தினமலர்
இந்தியா யாரென்று தெரிகிறதா * நடராஜன் ‘தீயென்று’ புரிகிறதா... | டிசம்பர் 04, 2020

கான்பரா: அறிமுக ‘டுவென்டி–20’ போட்டியிலேயே அசத்தினார் நம்ம நடராஜன். ‘தீயாக’ பந்துவீசிய இவர், ஆஸ்திரேலிய பேட்டிங்கை தகர்த்து 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கான்பராவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, தீபக் சகார் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜன், ‘டுவென்டி–20’ அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.

ராகுல் அரைசதம்

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் (1) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. ஹேசல்வுட், ஜாம்பா பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி நம்பிக்கை தந்த ராகுல், அபாட் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் என விளாசினார். மறுபக்கம் கோஹ்லி 9 ரன்னுக்கு அவுட்டாகினார். ராகுல், 37வது பந்தில் அரைசதம் அடித்தார். 11 ஓவரில் 86/2 ரன்கள் என நல்ல நிலையில் இருந்த இந்திய அணி, பின் திடீரென சறுக்கியது.ஸ்வெப்சன் பந்தில் சிக்சர் அடித்த சாம்சன் (23) கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். ஜாம்பா சுழலில் மணிஷ் பாண்டே (2) சிக்கினார். 40 பந்தில் 51 ரன் எடுத்த ராகுல், ஹென்ரிக்ஸ் பந்தில் சரிந்தார்.

ஜடேஜா நம்பிக்கை

இதன் பின் அணியின் ரன் வேகம் சரிந்தது. ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா இணைந்து ஒன்றும் இரண்டுமாக ரன்கள் எடுத்தனர். 15.3 வது ஓவரில் இந்தியா 100 ரன்களை எட்டியது. ரன் வேகத்தை அதிகரிக்க முயன்ற பாண்ட்யா 16 ரன்னுக்கு அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள் எடுத்தனர். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் ஜடேஜா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். ஸ்டார்க் வீசிய 20 ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஜடேஜா.

இந்திய அணி 20 ஒவரில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (44) அவுட்டாகாமல் இருந்தார்.

சகால் ‘இரண்டு’

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், ஷார்ட் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்திய அணியின் பீல்டிங்கும் சுமாராக இருந்தது. சகாரின் 2வது ஓவரில் பின்ச் கொடுத்த கேட்ச்சை மணிஷ் பாண்டே நழுவவிட்டார்.

அடுத்த பந்தில் ஷார்ட் தந்த கேட்ச்சை, கோஹ்லி கோட்டை விட்டார். இந்நிலையில் சகால் சுழலில் பின்ச் (35) அவுட்டானார். மீண்டும் மிரட்டிய சகால், ஸ்மித்தை (12) வெளியேற்றினார்.

நடராஜன் திருப்பம்

மறுபக்கம் நடராஜன் பந்தில்அபாயகரமான மேக்ஸ்வெல்(2) வீழ்ந்தார். இதன் பின் போட்டி இந்திய அணி பக்கம் திரும்பியது. தொடர்ந்து அசத்திய நடராஜன், ஷார்ட்டை (34) ‘பெவிலியன்’ திருப்பி அனுப்பினார். மீண்டும் வந்த சகால், மாத்யூ வேட்டை (7) அவுட்டாக்கினார். வேகம் காட்டிய ஹென்ரிக்ஸ் (30), சகார் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். நடராஜன் ‘யார்க்கரில்’ ஸ்டார்க் (1) போல்டானார்.ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1–0 என தொடரில் முன்னிலை பெற்றது. இந்திய அணி சார்பில் நடராஜன் , சகால் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

 

தோனியை முந்திய ஜடேஜா

நேற்று 23 பந்தில் 44 ரன்கள் எடுத்த ஜடேஜா, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 7வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஆனார். இதற்கு முன் 2008ல் இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் தோனி, 18 பந்தில் 38 ரன்கள் எடுத்ததே அதிகம்.

 

தாய் பெருமிதம்

ஓமலுார்:நேற்று ‘யார்க்கர்’ நடராஜன் ஆட்டத்தை அவரது சொந்த ஊரான, சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் வசிக்கும்தாய், தந்தை, சகோதரிகள், உறவினர்கள், ‘டிவி’யில் பார்த்து மகிழ்ந்தனர். நடராஜன் விக்கெட் வீழ்த்தும்போது, குடும்பத்தினர், கைதட்டி ஆரவாரம் செய்தனர்.நடராஜனின் தாய் சாந்தா கூறுகையில்,‘‘தொடர்ந்து என் மகன் விக்கெட் வீழ்த்தியதால், கிரிக்கெட் விளையாட்டில், முத்திரை பதித்துவிட்டான்,’’ எனக்கூறி, ஆனந்த கண்ணீர் விட்டார்.

 

9

 

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 வெற்றிகளை பதிவு செய்தது. தவிர, 2019 முதல் நேற்று வரை இந்தியா பங்கேற்ற 10 ‘டுவென்டி–20’ போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. இதில் 9ல் இந்தியா வென்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மூலக்கதை