பாக்., அணி பயிற்சிக்கு தடை | டிசம்பர் 04, 2020

தினமலர்  தினமலர்
பாக்., அணி பயிற்சிக்கு தடை | டிசம்பர் 04, 2020

வெலிங்டன்: பாகிஸ்தான் அணியில் உள்ள 8 பேருக்கு ‘கொரோனா’ உறுதியானதால், பயிற்சி மேற்கொள்வதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 ‘டுவென்டி-–20’ (டிச. 18, 20, 22), 2 டெஸ்ட் (டிச. 26–-30 மற்றும் 2021, ஜன. 3-7) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக 34 வீரர்கள் உட்பட 54 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியினர், கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நடத்திய பரிசோதனையில் 8 பேருக்கு ‘கொரோனா’ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தவிர, இவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் குழுவாக பயிற்சி மேற்கொள்ள இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிசம்பர் 4ம் தேதியுடன் பாகிஸ்தான் அணியினரின் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் நிறைவடைய வேண்டும். ஆனால் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 9 வரை தனிமைப்படுத்துதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை இவர்களால் பயிற்சி மேற்கொள்ள முடியாது. அதன்பின், நியூசிலாந்து அரசின் அனுமதியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களை பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை