களம் காண தயங்கும் வடமாநில தொழிலாளர்: போதிய வசதிகளால் தக்க வைக்க முடியும்

தினமலர்  தினமலர்
களம் காண தயங்கும் வடமாநில தொழிலாளர்: போதிய வசதிகளால் தக்க வைக்க முடியும்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ஜவுளி, மோட்டார் பம்ப் செட், மில்கள் உள்ளிட்டவற்றில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தங்கி பணிபுரிகின்றனர். ஆண்டுதோறும் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் இவர்கள், மீண்டும் பணிக்கு வருவதில் சுணக்கம் காட்டுவதால், தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பை சந்திக்கின்றன.

கொரோனா ஊரடங்கால் ஆறு மாதங்களுக்கு முன், சிறப்பு ரயில்கள் வாயிலாக மாநிலம் முழுவதும், லட்சகணக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முடங்கியிருந்த தொழில் துறை, வங்கிக் கடன், தவணை செலுத்த கால அவகாசம் போன்ற, மத்திய அரசின் நடவடிக்கையால், தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.இப்படிப்பட்ட சூழலில், வடமாநிலத்தவர் பலர், பணிக்கு திரும்ப வராததால், மாற்று நடவடிக்கையில் தொழில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

அதன்படி, புதிய பணியாளர்களை தேடுவது, அவர்களுக்கு பயற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.வழக்கமாக, பண்டிகை காலங்களில் வடமாநில தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதே சிரமமாக இருந்துவரும் நிலையில், ஊரடங்கால் நொந்துபோன இவர்களை, மீண்டும் களம் இறக்குவது என்பது சிரமமானது தான். அவர்களை தக்கவைக்க, தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்கின்றனர், தொழில் துறையினர்.

தொழில் துறையினர் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு என, கோவை மண்டலத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், பல்வேறு தொழில் பிரிவுகளில் பணிபுரிகின்றனர். உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இவர்களுக்கு ஊதியம் குறைவு தான்.இவர்களுக்கு, தங்கும் இடம், அரிசி, குறைந்த பட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள், பாலம் வேலை நடைபெறும் இடங்களில், இரவு, பகலாக அவர்களது பணியை காணமுடியும்.


இதேபோல், மில்கள், பவுண்ட்ரிகள் என அனைத்திலும், இவர்களது பங்களிப்பு அதிகம். ஒரே அறையில் நிறைய பேர் தங்க வைக்கப்படுவதுடன், விடுமுறையும் முறையாக வழங்கப்படுவதில்லை; மருத்துவ வசதிகளும் குறைவு தான். இதுபோன்ற காரணங்களால், சொந்த ஊர் செல்லும் இவர்கள், திரும்ப வர யோசிக்கின்றனர். சிலர் திரும்ப வந்தாலும், வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர். தேவையான வசதிகளை செய்து கொடுத்து, தொழிலாளர் நலனில் அக்கறை எடுத்தால், இங்கேயே அவர்களை தக்கவைக்க முடியும்.

மூலக்கதை