டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் ேபாராட்டம் 6ம் நாளாக நீடிக்கும் நிலையில், இன்று மாலை விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால், 32 விவசாய அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு பிற விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’ (டெல்லி நோக்கி பேரணி) என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் டெல்லியின் எல்லைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இன்று 6வது நாளாக நீடிக்கிறது.

போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க துணை ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக சிங்கு எல்லையின் இருபுறமும் இன்று மூடப்பட்டது.

திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டுள்ளது.

பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என். எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆனால், குறைந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் கூறுகையில், ‘நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் உள்ளன.   ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே மத்திய அரசு அழைத்துள்ளது.

பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை. அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில், நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை.

அனைத்து அமைப்புகளுடனும் பேசிய பின்னரே, பேச்சுவார்த்தையில் பங்கேற்பது பற்றி முடிவு செய்யப்படும்’ என்றார்.


.

மூலக்கதை