தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மின்னணு அஞ்சல் (இமெயில்) வாக்குகளை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

இதற்கு தொழில்நுட்ப ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.

மேலும், மின்னணு தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, வாக்களிக்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குள் தாங்கள் வாக்களிக்க விரும்புவது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

பின்னர் மின்னஞ்சல் வழியாக வாக்குச் சீட்டை பெற்று, அதில் தான் விரும்பிய வாக்காளருக்கு வாக்கை செலுத்தியபின்னர்,

அதனை சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தந்த தொகுதிகளுக்கான மின்னணு தபால் வாக்குகளை, தலைமை தேர்தல் அதிகாரிகள் அனுப்பி வைப்பர்.

கடந்த 2014ம் ஆண்டில், டாக்டர் ஷம்சிர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அதையடுத்து, வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக 2018 ஆகஸ்டில் மக்களவையில் ஒரு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.



இருப்பினும், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றவில்லை. இருந்தும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமை விரைவில் கிட்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளார்.

தோராய மதிப்பீடுகளின்படி, சுமார் 1 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 60 லட்சம் பேர் வாக்களிக்கும் வயதில் உள்ளனர்.

குறிப்பாக பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வெளிநாட்டில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை