எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்

மும்பை: சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் மத்திய அரசு, அவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டும் என்று சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி - அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போலீசாரின் செயல்பாடு குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையில் வெளியிட்ட செய்தியில், ‘வடமாநிலத்தில் கடுமையான குளிர் இருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு எதிராக தண்ணீரை பீய்ச்சி அடித்தது கொடூரமானது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற ஏஜென்சிகள் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறிவைக்கின்றன.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உதவியுடன் எதிர்க்கட்சியை அடக்க முடியும் என்று பாஜக அரசு நம்புகிறது.

மேலும், மேற்கண்ட புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்று கூறும் நீங்கள், ​​உண்மையான தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையை அடைவதை ஏன் தடுக்க முடியவில்லை.

எனவே, தீவிரவாதிகளை கண்காணிக்க அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ ஆகியவற்றை எல்லைக்கு அனுப்ப மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.

மத்திய அரசு காலிஸ்தான் பிரச்னையை மீண்டும் எழுப்புவதன் மூலம், பஞ்சாபில் தனது அரசியல் விளையாட்டை விளையாட முயற்சி செய்கிறது.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். சிவசேனா எம்எல்ஏவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணை தேவையற்றது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


.

மூலக்கதை