'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்!' - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தினகரன்  தினகரன்
அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்!  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கான்பெர்ரா: டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 6-வது நாளாக இன்றும் தொடருகிறது. டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளிலேயே படுத்துறங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர். விவசாயிகளின் இந்த பேரெழுச்சியால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது. இதனிடையே விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாகக் கனடா எப்போதும் துணை நிற்கும். போராடும் விவசாயிகள் குறித்த எங்கள் கவலைகளை இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கவனிக்காவிட்டால் நான் கடமை தவறியவனாவேன் என கூறினார்.

மூலக்கதை