பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் தேவை

தினமலர்  தினமலர்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் தேவை

கொட்டித்தீர்த்த கன மழையிலும், கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளில் மழை நீர் தேங்கவில்லை.

எனவே, இந்த பகுதிக்கு செயல்படுத்த உள்ள மழை நீர் வடிகால் திட்டத்தை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என, பொது நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்சென்னை, புறநகர் பகுதிகள் இயற்கை சீற்றத்தை சமாளிக்கும் வகையில், இயற்கையாகவே அமைந்துள்ளது. வங்கக் கடல் நீர் உட்புகாமல் இருக்க கடற்கரையோரம், சதுப்பு நிலப் பகுதிகள் அமைந்துள்ளன.கிழக்கு கடற்கரை சாலைக்கு, கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதிகள் மணற்பாங்கானது. ஆரம்ப காலத்தில் அங்கு, மீனவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.தற்போது, கடற்கரையில் இருந்து, 500 மீ., தொலைவு வரை, ஏராளமான நகர்கள், தெருக்கள் உருவாகி, அதில், பங்களாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்து விட்டன.

இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை, சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. அப்பகுதி மணற்பாங்கானது என்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல், நிலத்தில் சேகரமாகிவிடுவதால், 70 அடிக்குள், நிலத்தடிநீர் கிடைத்து விடும்.ரூ.376 கோடி கடந்த, 2015ல் புரட்டிப் போட்ட பெரு வெள்ளத்தின் போதும், இப்பகுதிகளின் சாலைகளில் மழை நீர் தேங்கவில்லை. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளான சோழிங்க நல்லுார், பெருங்குடி மற்றும் ஆலந்துார் மண்டலங்களில், மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது.இதற்காக, ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன், 326 கி.மீ., துாரத்துக்கு, 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டம் கடந்தாண்டு துவக்கப்பட்டது.இதில், கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை, 52 கி.மீ., துாரத்திற்கு, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்துடன், ஜெர்மன் தொழில் நுட்பத்தின்படி மழை நீர் வடிகால், 376 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன், பாலவாக்கம், பல்கலை நகரிலும், உத்தண்டியிலும் பணிகள் துவங்கப்பட்டன.கடும் எதிர்ப்புஆனால், மழை நீர் தேங்காத மணற்பாங்கான இப்பகுதியில், மழை நீர் வடிகால் அமைக்க, ஒட்டுமொத்த நலச்சங்கத்தினர், மீனவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.மேலும், இத்திட்டத்தை நிறுத்த, அனைத்து நலச்சங்கங்களும் இணைந்து, ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கி உள்ளன. அதன் சார்பில், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்திட்டத்திற்கு, மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், 'நிவர்' புயல் காரணமாக, கடந்த சில நாட்கள் கன மழை பெய்தது. இதில், சென்னை, புறநகரின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் மிதந்தன.அங்கு தேங்கியுள்ள மழை நீரை மோட்டார்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், 'மழை நீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும்' என, மாநகராட்சி முனைப்புடன் இருக்கும், கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில், சிறு துளி மழை நீர் கூட சேகரமாகவில்லை.

இது குறித்து, கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய குடியிருப்பு நலச்சங்கத்தினர் தரப்பில் கூறியதாவது:'நிவர்' புயல் காரணமாக, கொட்டித் தீர்த்த கன மழைக்கு, சென்னை புறநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி, சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.மழைநீரில் மிதந்த பகுதிகளில், மழை நீர் வடிகால் இல்லாததும், முறைப்படுத்தாததும் தான் காரணம்.எனவே, கிழக்கு கடற்கரை சாலைக்கான, 376 கோடி ரூபாய்க்கான திட்டத்தை, மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாநகராட்சி செயல்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை