வடியவில்லை : புயலால் பெய்த மழைநீர் பல இடங்களில்...வடிகால் கட்டியும் மழைநீர் தேங்கும் அவலம்

தினமலர்  தினமலர்
வடியவில்லை : புயலால் பெய்த மழைநீர் பல இடங்களில்...வடிகால் கட்டியும் மழைநீர் தேங்கும் அவலம்

கடலுார்; கடலுார் நகரில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டும் நகரில் பல இடங்களில் இன்னும்தண்ணீர் வடியாத நிலை நீடித்து வருகிறது

.இயற்கை சீற்றங்களில் பாதிக்கிற மாவட்டமாக கடலுார் உள்ளதால் மின்சார கேபிள்கள், மழை நீர் வடிகால் வாய்க்கால், ஆறுகளின் கரைகள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.கடலுாரில் பெரு வெள்ளத்திற்கு பின் 2016ம் ஆண்டு நகரில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்ட, ரூ. 42 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடக்கின்றன. இது வரை 20 சதவீத பணி கூட முடியவில்லை.இந்நிலையில் நிவர் புயல் காரணமாக கடலுாரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், நகரின் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளமாக காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் வடிகால் பிரச்னை காரணமாக தேங்கும் மழை நீரால் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். நகரில் டெலிபோன் காலனி, காமராஜர் நகர் உட்பட 17க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக நகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தன. மோட்டார் எடுத்துச்சென்று தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களான ஜட்ஜ் பங்களா ரோடு, நேதாஜி சாலை, புதுப்பாளையம், வண்ணா ரப்பாளையம், மஞ்சக்குப்பம் செயின்ஜோசப்சாலை போன்ற இடங்களில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆனாலும் தண்ணீர் தேங்கியுள்ளது.நகராட்சி உதவி பொறியாளர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது: இந்த ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடலுார், துாத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் கடல் மட்டத்தின் அளவில் தான் நகரமே உள்ளது.எனவே தான் வடிகால் பிரச்னை இருக்கிறது.

எனவே துல்லியமாக கணக்கிட்டு வாய்க்கால் கட்டும் பணி நடக்கிறது. இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு நிவர் புயலில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டியது. அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும், என்றார்.

மூலக்கதை