விவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

தினமலர்  தினமலர்
விவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

புதுடில்லி : டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, விவசாய சங்கங்களின் பிரதிநதிகளுடன் அரசு இன்று (டிச.1) பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.


வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 5 வது நாளாக தொடர்கிறது. 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை அறிவித்தனர். டில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் டில்லி - ஹரியானா எல்லை பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக பல்வேறு மாநில விவசாயிகளும் டில்லியின் புராரி மைதானத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

தொடர்ந்து, உ.பி.,யிலும் விவசாய சங்கங்களின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. மேலும் எங்கள் கோரிக்கைகளை ஏற்று, உரிய முறையில் பேச்சு நடத்தாவிட்டால், டில்லி வரும் அனைத்து சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்துவதாகவும் கூறினர். இந்நிலையில், விவசாய சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக டில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு விஞ்ஞான்பவனில் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறுகையில், புதிதாக இயற்றப்பட்ட பண்ணை (வேளாண்) சட்டங்கள் குறித்து விவசாயிகள் சில தவறான புரிதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். டிச.,3 அன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக நவ.,13 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆயினும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். தீவிரமாகும் கொரோனா தொற்று மற்றும் குளிர்காலம் போன்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு விரைவாக (டிச.,3) க்குள் பேசி நிலைமையை முடிக்க முடிவு செய்தோம். அதனால் தான் டிச.,1 (இன்று) விஞ்ஞான்பவனில் முதல்சுற்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிசான் / விவசாய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதி பூண்டுள்ளது.


மோடி அரசின் தலைமையின் கீழ், கடந்த ஆறு ஆண்டுகளில், உழவர் ( விவசாயிகளின்) வருமான அதிகரிப்புக்காக பல வரலாற்று பணிகள் செய்யப்பட்டன. புதிய பண்ணைத் திருத்தச் சட்டங்கள் வந்தபோது, ​​விவசாயிகள் மனதில் சில கட்டுக்கதைகள் இருந்தன. கிசான் தொழிற்சங்கங்களுடன் நாங்கள் இரண்டு அமர்வுகளை நடத்தினோம்.

முதலாவது அக்., 14 அன்று செயலாளர் மட்டத்திலும், நவ., 13 ஆம் தேதி நான் பியுஷ் கோயல் மற்றும் சோம் பிரகாஷுடனும், கிசான் தொழிற்சங்கங்களுடன் பேசினேன். எந்தவொரு நிபந்தனை உரையாடலையும் ஏற்க மாட்டோம் என்று கூறி, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் 'நிபந்தனை' வாய்ப்பை விவசாயிகள் நிராகரித்தனர். மேலும் தேசிய தலைநகருக்கான நுழைவு புள்ளிகளைத் தடுப்பதாக அச்சுறுத்தினர். இவ்வாறு கூறினார்.



மூலக்கதை