சாட்டிலைட் மூலம் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் மீது ஈரான் புகார்

தினகரன்  தினகரன்
சாட்டிலைட் மூலம் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் மீது ஈரான் புகார்

டெக்ரான்: ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் சூத்ரதாரியாக இருந்தவர் மொஹ்சென் பக்ரிசாதே. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று, டெக்ரான் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது, அருகே வந்த வாகனம் திடீரென வெடித்தது. இதனால் நிலைகுலைந்துபோய் காரை நிறுத்தினார். அப்போது அவரது காரைச் சூழ்ந்துகொண்ட மர்மநபர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.உயிரிழந்த பக்ரிசாதேவின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரியான அலி ஷம்கானி, இஸ்ரேல் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.‘‘மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த படுகொலை நடந்துள்ளது. பக்ரிசாதே அருகே வந்த கார் ரிமோட் மூலம் இயக்கப்பட்டதாக இருக்கலாம். அதேபோல், கொலை நடந்த இடத்தில் தனிநபர்கள் யாரும் சிக்கவில்லை. இதனால் சாட்டிலைட் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் பயன்படுத்தி, துப்பாக்கிச்சூடு நடந்திருக்கக் கூடும். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் இஸ்ரேல் ராணுவத்தின் குறியீடு இருந்தது. இதில் ஈரானின் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்கும் பங்கு இருக்கலாம். ஆனால், தெளிவான ஆதாரங்கள் எதுவும் இப்போது இல்லை’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை