சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்?

தினகரன்  தினகரன்
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்?

பெங்களூரு: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டு கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முடிகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்திருந்த அபராத தொகை 10 கோடியே 10 ஆயிரத்திற்கான நான்கு டி.டிக்கள் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் கடந்த மாதம் வக்கீல் பி.முத்துகுமார் தாக்கல் செய்தார்.  இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வக்கீல்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு 26 நாட்களும், கடந்த 2014ம் ஆண்டு 22 நாட்கள் என 48 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இந்த 48 நாட்கள் சிறை தண்டனையில் கழித்து முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளனர். இதனிடையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, கன்னட மொழியை கற்றுக்கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். வெளி மாநிலத்தை சேர்ந்த தண்டனை கைதி, சிறையில் இருக்கும்போது கன்னடமொழி கற்றுகொண்டுள்ளதால், அவரின் தண்டனை காலம் முடிவதற்கு 21 நாட்கள் முன் விடுதலை செய்ய வேண்டும் என்று சில கன்னட அமைப்பினர் சிறை நிர்வாகத்திற்கு ேகாரிக்கை வைத்துள்ளதாக தெரியவருகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்கிறது. இந்த சமயத்தில் தண்டனை காலம் முடிவதற்கு முன் சசிகலா விடுதலை செய்யப்பட்டால், அது அதிமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என அக்கட்சியின் மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம், கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜ அரசுக்கு நெருக்கடி கொடுத்து, சசிகலாவை வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை எந்த சிறப்பு சலுகையையும் காரணம் காட்டி விடுதலை செய்யாமல் தடுக்கும் முயற்சியை மேற் கொண்டு வருகின் றனர்.

மூலக்கதை