பாதாள சாக்கடை குழியில் நீருற்று! தொடருது தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி

தினமலர்  தினமலர்
பாதாள சாக்கடை குழியில் நீருற்று! தொடருது தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி

திருப்பூர்:பாதாள சாக்கடை திட்டத்துக்கு இறங்கு குழி அமைக்க குழி தோண்டிய இடத்தில் நீர் ஊற்று கிளம்பியது. இதனால், தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது.திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் மண்டலத்துக்கு உட்பட்ட ஐஸ்வர்யா கார்டன், கதிர் நகர் பகுதிகளிலிருந்து பாரப்பாளையம் ரோடு வழியாக ஊத்துக்குளி ரோடு சென்றடையும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழாய் அமைக்கப்படவுள்ளது.
இதில் ஒரு கட்டமாக திட்டமிடப்பட்ட பகுதிகளில் ஆள் இறங்கு குழாய் அமைக்க, குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இதில் கதிர் நகர் பகுதியில் ஆழமாக குழி தோண்டிய இடத்தில் பெரிய அளவிலான பாறைகள் உள்ளன.இந்த பாறைகளை ராட்சத டிரில்லர் கொண்டு உடைத்து குழி அமைக்கும் பணி நடக்கிறது. இதில் பாறையிலிருந்து நீர் ஊறி வெளியேறுகிறது. இதனால், தண்ணீரை அப்புறப்படுத்தி குழி தோண்டும் பணி நடைபெறுகிறது.
இப்பகுதியில் குறுக்கு வீதிகளில், ஏற்கனவே குடிநீர் குழாய் அமைக்க குழி தோண்டி பணி நடந்தது. தற்போது பாதாள சாக்கடைக்கு ஆள் இறங்கு குழி தோண்டப்படுகிறது. அதன்பின் இதற்கான குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் 'காங்கயம் ரோட்டிலிருந்து ஊத்துக்குளி ரோடு செல்லும் வகையில் இந்த ரோடு இணைப்பு ரோடாக உள்ளது.
அதிக வாகன போக்குவரத்து உள்ளது.இதனால், குழி தோண்டுதல் மற்றும் குழாய் பதித்தல் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்காத வகையில் பணி மேற்கொள்ளப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை