வெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020

தினமலர்  தினமலர்
வெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. எட்டு மாதங்களுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி-–20’ மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. கடந்த ஜனவரி - மார்ச் மாதத்தில் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய இந்திய அணி, அதன்பின் கொரோனா பரவல் காரணமாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. எட்டு மாதங்களுக்கு பின், சர்வதேச போட்டிக்கு திரும்புவது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய அனுபவம் கைகொடுத்தால் இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால் நம்பிக்கை தரலாம். வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மிரட்ட காத்திருக்கின்றனர். ஒருவேளை இவர்களில் ஒருவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தால் ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி தேர்வாகலாம்.

மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட ‘வேகங்கள்’ இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக அமையலாம். ‘சுழலில்’ ஆடம் ஜாம்பா சாதிக்கலாம்.

அணி விவரம்

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், லோகேஷ் ராகுல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட், சீன் அபாட், ஆஷ்டன் ஏகார், கேமிரான் கிரீன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆன்ட்ரூ டை, டேனியல் சாம்ஸ், மாத்யூ வேட் (விக்கெட் கீப்பர்).

 

140 போட்டிகள்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 140 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 52, ஆஸ்திரேலியா 78ல் வெற்றி பெற்றன. பத்து போட்டிகளுக்கு முடிவு இல்லை.

* ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகள் 51 ஒருநாள் போட்டியில் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா 36, இந்தியா 13ல் வென்றன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

 

3வது முறை

இந்திய அணி, 3வது முறையாக இரு அணிகள் மட்டும் பங்கேற்கும் தொடரில் (‛பைலேட்ரல் சீரிஸ்’) பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதற்கு முன், 2015-16ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என இழந்தது. பின், 2018-19ல் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது.

 

இம்மைதானத்தில் இதுவரை...

முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இங்கு இவ்விரு அணிகள் 17 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 14, இந்தியா 2ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. தவிர இங்கு இந்திய அணி, இங்கிலாந்து (1985), நியூசிலாந்து (1985), பாகிஸ்தான் (1992) அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

* கடந்த 2004ல் இங்கு நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது. கடந்த 2016ல் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 49.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்தது.

* கடந்த 2004ல் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங், 122 பந்தில் 139 ரன்கள் குவித்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கு ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் (2004) 126 ரன்கள் எடுத்தார்.

 

மழை வருமா

சிட்னியில் இன்று வெப்பநிலை அதிகபட்சம் 26, குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கறுப்பு பட்டை

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ், கடந்த செப். 24ல் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டியில் விளையாடிய இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தங்களது கையில் கறுப்பு பட்டை அணிய உள்ளனர்.

 

பாதுகாப்பு வளையம்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியினர் சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பார்க் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி ரூம் வழங்கப்பட்டது. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலை இருந்தது. இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொண்ட இவர்கள், முதல் போட்டி துவங்குவதற்கு முதல் நாளான நேற்று, கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் சென்றனர். இதனையடுத்து சிட்னியில் உள்ள இன்டர் கான்டினென்டல் ஓட்டலுக்கு மாற்றப்பட்டனர். இனி இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளலாம். ஒன்றாக உணவு சாப்பிடலாம்.

மூலக்கதை