ஒருநாள் அணியில் நடராஜன் | நவம்பர் 27, 2020

தினமலர்  தினமலர்
ஒருநாள் அணியில் நடராஜன் | நவம்பர் 27, 2020

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் தமிழகத்தின் நடராஜன் சேர்க்கப்பட்டார். 

இந்திய அணியின் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ‘யார்க்கர்’ பந்துகள் வீசுவதில் வல்லவர். கடந்த ஐ.பி.எல்., தொடரில் 71 ‘யார்க்கர்’ பந்துகள் வீசினார். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு பந்து வீச அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே இந்திய ‘டுவென்டி–20’ அணியில் இடம் பெற்றிருந்த மற்றொரு தமிழக ‘சுழல்’ வீரர் வருண் சக்ரவர்த்தி தோள்பட்டை காயத்தால் விலக, வாய்ப்பு நடராஜனுக்கு சென்றது.

தற்போது இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள நவ்தீப் சைனி, முதுகுப்பகுதி வலியால் அவதிப்படுகிறார். இதனால் இவருக்கு மாற்று வீரராக, ஒருநாள் அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘லக்கி’ வீரர்

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் 29 வயதில் அறிமுக வாய்ப்பு பெறுவது சில நேரங்களில் தான் நடந்தன. 1958 ல் குலாம் கார்டு டெஸ்டில் வாய்ப்பு பெற்றார். 1994 ல் புபிந்தர் சிங் சீனியர், 2014ல் பங்கஜ் சிங், 2015ல் அரவிந்த், 29 வயதில் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றனர். இந்த வரிசையில் நடராஜன் இடம் பெற காத்திருக்கிறார்.

 

இஷாந்த் விலகல்

ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடிய போது இஷாந்த் வயிற்றுப்பகுதி தசையில் கிழிசல் ஏற்பட்டது. இதில் இருந்து முழுமையாக மீண்ட இவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க காத்திருந்தார். இதற்காக பெங்களூரு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இவர், முழு உடற்தகுதி பெற சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால், டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

 

ரோகித் எப்படி

கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா செல்வது சந்தேகமாக உள்ளது. உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை காண மும்பை சென்றுள்ள இவருக்கு, வரும் டிச. 11ம் தேதி உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேறினால் மட்டுமே ஆஸ்திரேலியா செல்ல முடியும்.

மூலக்கதை