விண்டீசை வீழ்த்தியது நியூசி., | நவம்பர் 27, 2020

தினமலர்  தினமலர்
விண்டீசை வீழ்த்தியது நியூசி., | நவம்பர் 27, 2020

ஆக்லாந்து: விண்டீசுக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. ஆக்லாந்தில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் சவுத்தீ, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். போட்டி துவங்கிய முதல் ஓவரில் மழை குறுக்கிட்டது. பின், 2, 10வது ஓவர்களின் முடிவில் மழையால் போட்டி தடைபட்டது. இதனால் தலா 16 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

 

விண்டீஸ் அணிக்கு ஆன்ட்ரி பிளட்சர் (34) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் போலார்டு, 37 பந்தில் 8 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 75 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் அணி 16 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் பெர்குசன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

 

பின், நியூசிலாந்து வெற்றிக்கு 16 ஓவரில் 176 ரன்கள் என, ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மார்டின் கப்டில் (5), ராஸ் டெய்லர் (0) ஏமாற்றினர். கான்வே (41) நம்பிக்கை தந்தார். பின் இணைந்த ஜேம்ஸ் நீஷாம் (48*), மிட்சல் சான்ட்னர் (31*) ஜோடி கைகொடுத்தது. போலார்டு பந்தை சிக்சருக்கு அனுப்பிய சான்ட்னர் வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணி 15.2 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பெர்குசன் வென்றார். நியூசிலாந்து அணி 1–0 என, முன்னிலை பெற்றது.

மூலக்கதை