கிரெய்க் பிராத்வைட் இரட்டை சதம்: விண்டீஸ் அணி ரன் குவிப்பு | நவம்பர் 27, 2020

தினமலர்  தினமலர்
கிரெய்க் பிராத்வைட் இரட்டை சதம்: விண்டீஸ் அணி ரன் குவிப்பு | நவம்பர் 27, 2020

குயீன்ஸ்டவுன்: நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான நான்கு நாள் பயிற்சி போட்டியில் கிரெய்க் பிராத்வைட் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 571 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஹாமில்டனில் வரும் டிச. 3ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் டிச. 11–15ல் வெலிங்டனில் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக விண்டீஸ் அணி, 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது.

 

குயீன்ஸ்டவுனில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 353 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் (183), பிளாக்வுட் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் அணிக்கு கிரெய்க் பிராத்வைட் (246) இரட்டை சதம் கடந்து கைகொடுத்தார். பிளாக்வுட் (53), ரேமன் ரீபர் (46) ஒத்துழைப்பு தர முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 571 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

பின், முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து ‘ஏ’ அணி, 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்றி கூப்பர் (19), ரவிந்திரா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை