ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்: பிஎஸ்எஃப் வீரர்கள் எச்சரிக்கையை அடுத்து திரும்ப சென்றது

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்: பிஎஸ்எஃப் வீரர்கள் எச்சரிக்கையை அடுத்து திரும்ப சென்றது

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 37-வது பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, எல்லையோர கிராமங்கள், இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில், இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஆர்.எஸ்.புரம் செக்டரின் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இரவு ஒரு ட்ரோன் காணப்பட்டது. தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படையினர் ட்ரோன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்த பின்னர் அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தான் நோக்கி சென்றதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த செயல், ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அமைதியை குலைக்கும் நோக்கில் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

மூலக்கதை