அவதி! குண்டும் குழியுமாக மாறிய புதுச்சேரி-கடலுார் சாலை ...அச்சத்தில் வாகன ஓட்டிகள்

தினமலர்  தினமலர்
அவதி! குண்டும் குழியுமாக மாறிய புதுச்சேரிகடலுார் சாலை ...அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலை ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

புதுச்சேரி - கடலுார் சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையால் இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.பிள்ளையார்குப்பம் முதல் கிருமாம்பாக்கம் வரை சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால், கழிவு நீருடன் மழை நீர் கலந்து, சாலையில் தேங்கி நின்றது. தற்போது, தண்ணீர் வடிந்த நிலையில், சாலையின் இருபுறமும் சேறும் சகதியுமாகி, சாலை குறுகளாகி விட்டது.

அதேபோல், அரியாங்குப்பம் சிக்னல் முதல் தவளக்குப்பம் எல்லை பகுதி வரையிலான சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. சாலையில் ஜல்லி துகள்களும், மணலும் அதிகளவில் கிடப்பதால், கனரக வாகனங்கள் செல்லும் போது, உருவாகும் புழுதிப் புயல், பல நுாறு மீட்டர் வரை காற்றில் பறக்கிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பலர் விபத்துகளிலும் சிக்குகின்றனர். மேலும், பார்வை பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட சுவாச கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, புதுச்சேரி - கடலுார் சாலையை, சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை