மிகத்துல்லியமான முடிவைக் காட்டும் கொரோனா பரிசோதனை கருவி; ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
மிகத்துல்லியமான முடிவைக் காட்டும் கொரோனா பரிசோதனை கருவி; ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை

டோக்கியோ: தவறான முடிவுகளைக் காட்டும் கொரோனா சோதனை கருவிகள் பல, கொரோனா வைரஸ் தாக்கப்படாதவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் விஞ்ஞானிகள் மின்சார அயனிகள் உதவியுடன் ஓர் துல்லியத் தன்மை கொண்ட பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஏசிஎஸ் சென்சார் என்ற இதழில் பிரசுரிக்கப்பட்ட ஓர் தகவல் தற்போது வைரல் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு அதிநவீன சோதனை கருவி கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கண்ணுக்குத் தெரியாத நுண் துளையில் மின்சாரத்தை பாய்ச்சி அதன் மூலமாக வைரஸ் கூறுகளை கண்டறிந்து துல்லியத்தன்மை வாய்ந்த ஓர் கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிக்கலாம் என என்று ஜப்பானின் ஒசாகா பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சிலிக்கான் நேனோ போர்ஸ் என்கிற சிறு துளைகளில் மின்சாரம் பாய்ச்சப்படும். சிலிக்கான் நைட்ரேட் கலவையால் உருவாக்கப்பட்ட மெல்லிய தகட்டில் இந்த நேனோபோர் எனப்படும் நுண்துளைகள் உள்ளன. எலக்ட்ரோ போரோசிஸ் என்ற முறை மூலமாக சிறு அயனிகளை இந்த துளைகளுக்குள் செலுத்தவேண்டும்.

பின்னர் கொரோனா வைரஸ் இந்த நேனோபோர்களில் செலுத்தப்படும்போது அயனிகளின் நகர்வை சில துளைகளில் அது கட்டுப்படுத்தும். இதன் மூலமாக செயற்கை நுண்ணறிவின் உதவியோடு கொரோனா வைரஸின் நுண் கூறுகளை அறிய முடியும். கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் அடினோவைரஸ், இன்ஃப்ளூயன்சா ஏ, பி உள்ளிட்ட வைரஸ்களையும் இந்த முறை மூலமாக ஆய்வு செய்ய முடியும்.

கொரோனா வைரஸில் புரதம் இருப்பதால் எளிதில் இந்தமுறை மூலமாக அதன் கூறுகளை ஆராய்ச்சி செய்யமுடியும். இதன்மூலமாக நவீன பரிசோதனை கருவியை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை