எச்சரிக்கை! 'லெப்டோஸ்பைரசிஸ்' நோய் பரவ வாய்ப்பு ... வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு

தினமலர்  தினமலர்
எச்சரிக்கை! லெப்டோஸ்பைரசிஸ் நோய் பரவ வாய்ப்பு ... வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு

சென்னை : வெள்ளம் பாதித்த பகுதிகளில், 'லெப்டோஸ்பைரசிஸ்' என்ற உயிர் கொல்லி நோய் பரவ வாய்ப்புள்ளதால், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், பெருங்குடி மண்டலத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'நிவர்' புயல் காரணமாக, கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழை நீர், வடியாமல் உள்ளது. பெருங்குடி, ஆலந்துார் மண்டலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தொற்றுநோய் பாதிப்பைத் தடுக்க, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பெருங்குடி மண்டலத்தில், 'லெப்டோஸ்பைரசிஸ்' நோய் பரவாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, பெருங்குடி மண்டல சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: மஹா., வில், 2013ல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதற்கு தொற்று நோய்
பரவியதே காரணம். மழை நீர் தேங்கியபகுதிகளில், 'லெப்டோ ஸ்பைரசிஸ்' எனும், எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எலியின் சிறுநீர், தேங்கி கிடக்கும் வெள்ளத்தில் கலப்பதால் ஏற்படும் பாக்டீரியாவால், இந்த நோய் ஏற்படுகிறது.தேங்கிய தண்ணீரில் வெறும் காலுடன் நடக்கும்போது, தோல் வழியாக இந்த நோய் பரவும்.'லெப்டோஸ்பைரசிஸ்' நோயை துவக்கத்தில்
கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம்; அலட்சியமாக விட்டால், கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து, உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.

திடீர் தலைவலி, அதிக காய்ச்சல், வாந்தி, உடம்பு வலி, உடம்பு மஞ்சள் நிறமாவது ஆகியவை தான், இந்த நோயின் அறிகுறிகள். இந்நிலையில், பெருங்குடி மண்டலம் முழுதும் மழை நீர் தேங்கிய இடங்களில், எலிகள் அதிகம் உலாவும் இடங்களை கண்டறிந்து, அவற்றுக்கு பிடித்த உணவுப் பண்டங்களுடன், 'ராட்டோல்' எனும் எலி மருந்தை கலந்து வைக்கும் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை தண்ணீரில் விளையாட விடாதீர்கள்; விளையாட்டு பொம்மைகள் ஈரமாக இருந்தால், அவற்றை நன்கு கழுவி, காய்ந்த பின் கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை