தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை; கலெக்டர் தகவல்

தினமலர்  தினமலர்
தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை; கலெக்டர் தகவல்

மதுரை: 'மதுரை மாவட்டத்தில் பருவமழையின் போது தாழ்வான பகுதிகளில் தண்ணீரை மூன்று மணி நேரத்திற்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படுவதாக 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மழை பெய்தவுடன் தேங்கும் நீரை மூன்று மணி நேரத்திற்குள் வெளியேற்ற சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிவர் புயலால் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் அடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் மழையை எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உபரிநீர் கால்வாய்களில் வெளியேறும்.நகர், புறநகர் பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. மண்டபங்கள், அரங்குகளில் பொதுமக்கள் கூடும் திருமணங்கள், இல்ல விழாக்களில் விழா ஏற்பட்டாளர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை