மறுசுழற்சி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் அதிகரிப்பு: திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்கள் சுறுசுறுப்பு

தினமலர்  தினமலர்
மறுசுழற்சி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் அதிகரிப்பு: திருப்பூரில் நிட்டிங் நிறுவனங்கள் சுறுசுறுப்பு

திருப்பூர்;திருப்பூர் நிறுவனங்களுக்கு, மறுசுழற்சி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் அதிகளவு கிடைத்துள்ளது.திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பருத்தி நுாலிழையில், உள்நாடு, வெளிநாட்டு சந்தைகளுக்காக, பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன. ஆடை தயாரிப்புக்காக துணியை அளவீடு செய்து வெட்டும்போது, சிறிதளவு வீணாகிறது.
'கட்டிங் வேஸ்ட்' எனப்படும் இந்த துணியை அரைத்து பஞ்சாக்கி, மறு சுழற்சி நுால் தயாரிக்கப்படுகிறது.இந்த நுாலை பயன்படுத்தி, தரமான மற்றும் விலை குறைந்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இத்தகைய ஆடைகளுக்கு, அமோக வரவேற்பு உள்ளது. கொரோனாவுக்குப்பின், திருப்பூர் ஆடை உற்பத்தி துறை தற்போது வேகமெடுத்துள்ளது.
இது குறித்து, தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஆடை உற்பத்தியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் நிறுவனங்கள், முழுவீச்சில் இயங்கி வருகின்றன.
குறிப்பாக, 'கட்டிங் வேஸ்ட்'ல் உருவாக்கப்படும் நுாலிலை பயன்படுத்தி, மறுசுழற்சி ஆடை தயாரிப்பதற்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளன. இதனால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 20 மற்றும் 30ம் நம்பர் மறுசுழற்சி நுாலில் துணி தயாரிக்க, நிட்டிங் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்கியுள்ளன.
மறுசுழற்சி ஆடைகள் விலை மிக குறைவு. ஏற்கனவே சாயமேற்றப்பட்டிருப்பதால், மீண்டும் சாயமேற்ற தேவையில்லை. சிறந்த தரத்தில் தயாரித்த துணியின் கழிவு என்பதால், மறுசுழற்சி ஆடைகள், தரம்மிக்கதாகவே உள்ளன.அதிக விலை கொடுத்து ஆடை வாங்குவோர் எண்ணிக்கை மிக குறைவு. உள்நாட்டிலும், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளிலும், குறைந்த விலை ஆடைகளுக்கு நுகர்வோர் அதிகம் உள்ளனர்.
வர்த்தகர்கள், மறுசுழற்சி ஆடைகளை தயாரித்து பெற்று, விற்பனை செய்கின்றனர்.டிராக் சூட், நடை பயிற்சிக்கான ஆடை, டி-சர்ட் என, அனைத்துவகையான மறுசுழற்சி ஆடை ரகங்களும் தயாரிக்கப்படுகின்றன.உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து, மறுசுழற்சி துணி தயாரிப்புக்கு அதிகளவு ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. மறுசுழற்சி ஆடை தயாரிப்பு மூலம், 'கட்டிங் வேஸ்ட்' என்கிற தொழிற்சாலை கழிவு, வர்த்தகத்தை ஈட்டித்தரும் அம்சமாக மாறிவிடுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை