போயிட்டே இரு! 42 உதவியாளர்கள் ஒரே நாளில் பந்தாட்டம்:'ஓகோ' வாழ்க்கை போனதால் திண்டாட்டம்

தினமலர்  தினமலர்
போயிட்டே இரு! 42 உதவியாளர்கள் ஒரே நாளில் பந்தாட்டம்:ஓகோ வாழ்க்கை போனதால் திண்டாட்டம்

கோவை:கோவை மாநகராட்சி அலுவலக உதவியாளர்களில், 42 பேர், ஒரே நாளில் இட மாறுதல் செய்யப்பட்டனர். இது, அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசு உயரதிகாரிகளுக்கு ஒரு உதவியாளர் நியமிப்பது வழக்கம். ஆனால், கோவை மாநகராட்சியில் சில அதிகாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.
துாய்மை பணியாளர்கள் மற்றும் தேர்ச்சி திறனற்ற பணியாளர்களில் சிலர், அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சிலர், அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுப்பதற்காக மட்டுமே இருக்கின்றனர். அதிகாரிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள், கீழ்மட்ட அதிகாரிகளிடம் சில உதவியாளர்கள் பணம் கேட்டு, நச்சரிக்கும் செயலும், தொடர்கதையாக நடந்து வந்தது.
மேலும், மூன்று ஆண்டுக்கு மேலாக, ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஒருவர் கேள்வி கேட்டுள்ளாார்.சிக்கலான சூழல் உருவானதை தொடர்ந்து, ஒரே நாளில், 42 பேருக்கு இட மாறுதல் வழங்கி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார மேற்பார்வையாளர் - 1, அலுவலக உதவியாளர் - 9, துாய்மை பணியாளர் - 13, தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் - 18 பேர், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.ஆனால், மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பணிபுரிவோரை மட்டும் மாற்றம் செய்யவில்லை. இது, அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.இன்னும் நிறைய அலுவலர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே பிரிவில், ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். அவர்களை மாற்றாமல் இருப்பது, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மீண்டும் அதே இடம் ; இந்த முறை நடக்காது'நிர்வாக நலன்' கருதி, மாநகராட்சி கமிஷனர், இட மாறுதல் வழங்கினாலும், யாரையாவது பிடித்து, மீண்டும் பழைய இடத்துக்கு சிலர், திரும்பி வந்து விடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், குலசேகரன், தாஸ், வீரகுமார், நாகராஜ் உள்ளிட்டோர், வெவ்வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும், மீண்டும் பழைய பிரிவுக்கே திரும்பி வந்து விட்டனர்.

மூலக்கதை