மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 52% வாக்கு பதிவு: தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களிப்பு

தினகரன்  தினகரன்
மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 52% வாக்கு பதிவு: தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி மக்கள் வாக்களிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில், 52 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி  உள்ளிட்டவை இணைந்த ‘குப்கார் கூட்டணி’, பாஜ மற்றும் அப்னி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில், கடும் போட்டி நிலவுகிறது.இந்நிலையில், முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் 1,475 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல் கட்டமாக காஷ்மீரில் 25 தொகுதிகள், ஜம்முவில் 18 தொகுதிகள் உட்பட்ட  மொத்தம் 43 தொகுதிகளில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாயத்து பதவிகளுக்கான இடைத்தேர்தலில் 899 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்காக 280 பேர் போட்டியிடுகின்றனர். கொரோனா அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 2,644 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்த வாக்காளர்கள் 7.3 லட்சம். இவர்கள் முதல் கட்ட தேர்தலில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மோசமான சீதோஷண நிலை காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. மொத்தம் 51.76 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் கூறினர்.

மூலக்கதை