தங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்

தினகரன்  தினகரன்
தங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்

சென்னை: தங்கம் விலை 6வது நாளாக நேற்று சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவதால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. தங்கம் விலையில் கடந்த 3 மாதங்களாக ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 23ம் தேதி ஒரு சவரன் ரூ.37,984, 24ம் தேதி ரூ.37,120, 25ம் தேதி ரூ.36,912, 26ம் தேதி ரூ.36,904க்கும் விற்கப்பட்டது. 5வது நாளாக நேற்று முன்தினம் ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,589க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.36,712க்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில் 6வது நாளாக நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.4,574க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.36,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,392 அளவுக்கு குறைந்துள்ளது. ஜெட் வேகத்தில் கடந்த காலத்தில் அதிகரித்து வந்த தங்கம், தற்போது தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால், நேற்றைய விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பிறகே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

மூலக்கதை