இந்திய மக்கள் தொகையில் 7ல் ஒருவர் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா ? : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: இந்திய மக்கள் தொகையில் 7ல் ஒருவர் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை மாவட்டம் சின்னச்சொக்கிக் குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிறையில் உள்ள கைதிகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் ஆகவே திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்க அமைப்பு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மக்கள் தொகையில் 7 நபர்களுக்கு ஒருவர் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறுவது உண்மையா என கேள்வி எழுப்பினர். மேலும் இந்திய மக்கள் தொகையில் அதிகமானோர் பாதிக்கப்படும் உளவியல் பிரச்சனை என்ன?, உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் கள ஆய்வு மேற்கொள்கிறதா ?, மத்திய, மாநில அரசுகள்எப்போது கள ஆய்வுகள் மேற்கொண்டது?, மாவட்ட, மண்டல அளவில் மனநல மருத்துவமனைகளை மத்திய, மாநில அரசுகள் ஏன் தொடங்கவில்லை?,இந்தியாவில் போதுமான அளவு மனநல மருத்துவமனைகள் உள்ளதா ? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் மேற்கண்ட கேள்விகளுக்கு மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 9ம் தேதிக்கு உத்தரவிட்டனர்.
மூலக்கதை
