அகமதாபாத், புனே, ஐதராபாத் நகரங்களில் உள்ள தடுப்பூசி ஆய்வகங்களில் பிரதமர் ஆய்வு; பொதுமக்களுக்கு இலவசமாக விரைவில் வழங்க ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அகமதாபாத், புனே, ஐதராபாத் நகரங்களில் உள்ள தடுப்பூசி ஆய்வகங்களில் பிரதமர் ஆய்வு; பொதுமக்களுக்கு இலவசமாக விரைவில் வழங்க ஏற்பாடு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், பொதுமக்களுக்கு விநியோகிப்பது குறித்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நேரில் இன்று சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, எப்போது பொதுமக்களுக்கு வழங்குவது என்று ஆலோசனையும் நடத்தினார்.

சீனாவின் வூகானில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன.

அந்தவகையில் இங்கிலாந்தின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.   இந்தியாவில், புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங்களில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனையை நடத்துகின்றன.



தற்போது உலகம் முழுவதும் ‘கோவிஷீல்டி’ன் 3ம் கட்ட தடுப்பூசி சோதனை நடந்து வருகிறது. இதன் இடைக்கால முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.

அவை 70 சதவீதம் ஆற்றல் மிக்கவை என்றும், தடுப்பூசியை பிரித்து அளிக்காமல் ஒரே முறையாக செலுத்தும் போது 90 சதவீதம் வரை பயனளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்துடன் சேர்ந்து 5 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.

சீரம் நிறுவன பணிகள் நிறைவு நிலையை அடைந்துள்ள நிலையில், பாரத் பயோடெக் 3ம் கட்ட சோதனைகளைத் தொடங்கியுள்ளது. ஜைடஸ் காடிலா இரண்டாம் கட்ட சோதனையை முடித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5, டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து சோதனைகளை முடித்து 2 மற்றும் 3ம் கட்ட சோதனைகளை ஆரம்பித்துள்ளது. பைலாஜிக்கல் - இ தற்போது ஆரம்பக் கட்ட சோதனையில் உள்ளது.

முதலில் வெளியாகும் தடுப்பூசியை இந்தியாவில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் எனப்படும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட ஒரு கோடி நபர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, மாநிலம் வாரியான பட்டியலை தயாரித்துள்ளது.

முதன்முதலாக வெளியாகும் தடுப்பூசியை மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசின் நிபுணர்கள் குழு ஒப்புக் கொண்ட பிறகு, மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை முதற்கட்டமாக போடுவது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் பேசியுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கும் மையங்களை இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்.

முதன்முறையாக டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் சென்ற மோடி, அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து, அங்குள்ள ஆராய்ச்சி மற்றும் நிபுணர்களிடம் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து புனே சென்ற பிரதமர் மோடி அங்குள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின் அங்கிருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் மோடி, அங்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி மீதான விவரங்களை கேட்டறிந்தார். கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு மாதங்களுக்குள் தயாராகி விடும் என்று கூறப்படும் நிலையில் அவற்றை நாடெங்கும் கொண்டு சென்று சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

பிரதமரின் ஆய்வு, தடுப்பூசி விநியோகத்தில் இறுதிகட்டத்தை அடைந்ததற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

அதனால், விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்றும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை