வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள வளி மண்டல காற்று சுழற்சி நாளை காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வலுப்பெறும் நிலையில் புயலாக மாறி டெல்டா மாவட்டங்களுக்கு இடையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் தென்கிழக்கு வங்க கடலில் நிவர் புயல் உருவானது. அது தீவிர புயலாக மாறி, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே 25ம் தேதி இரவு பலமிழந்து கரையை கடந்தது.

தற்போது அந்த புயல் மகாராஷ்டிரா ேநாக்கி நகர்ந்து சென்றுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழக கடலோர பகுதியில் கோடியக்கரை முதல் சென்னை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதுடன், பல இடங்களில் தேங்கியும் உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழைநீர் வடிந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப குறைந்த பட்சம் ஒரு வாரமாகும் என தெரிகிறது. இந்நிலையில், வட கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால், மீண்டும் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தமிழக கடலோர பகுதியில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சோளிங்கரில் 230 மிமீ மழை பெய்துள்ளது.

இதுதான் நேற்றைய மழையின் அதிகபட்ச அளவு. இது இயல்பு நிலையைவிட அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.



இதையடுத்து, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான், நிகோபார் தீவு பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை குறைந்த காற்றழுத்தமாக மாறும்.

இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். இந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகள், தென் கடலோர ஆந்திர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும்.

பின்னர் அந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை