சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி : சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுகோள்!!

தினகரன்  தினகரன்
சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி : சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுகோள்!!

திருவனந்தபுரம்,:சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து கடந்த 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குடிநீர் பாட்டில்கள், பைகள் உட்பட எந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் மட்டும் பிளாஸ்டிக் பயன்படுத்த சில தளர்வுகளை அமல்படுத்த கோரி, சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தற்போது கொரோனா காலம் என்பதால் அனைவருக்கும் முகக்கவசம், கையுறைகள், பேஸ் ஷீல்டு, சானிட்டைசர் உள்ளிட்டவை பயன்படுத்த வேண்டியது உள்ளது. இதனால் பிளாஸ்டிக் தடையின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். இதன்மூலம் சேகரமாகும் பிளாஸ்டிக்கை முறையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட மனுவை விசாரித்த  உயர்நீதிமன்றம்,  சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை தளர்த்த முடியாது என தெரிவித்தது. மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  ‘கொள்ளை நோய் பரவிவரும் இந்த சூழ்நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே அரசும், தேவஸம்போர்டும் பக்தர்களை அனுமதித்துள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதால்தான் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையில் குவியும் பிளாஸ்டிக்கை எப்படி முறையாக அப்புறப்படுத்தப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சொந்த வீடு தவிர பூமியில் எங்கு வேண்டுமானாலும் குப்பைகளை போடலாம் என மனிதர்கள் கருதுகின்றனர். வருங்கால தலைமுறை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதால், பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்த முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை