செய்தி சில வரிகளில்...உலகசம்

தினமலர்  தினமலர்
செய்தி சில வரிகளில்...உலகசம்

பதவி விலக தயார்: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தலுக்குப் பின், முதன் முறையாக செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, 'எலக்டோரல் காலேஜ், ஜோ பைடன் வெற்றியை அங்கீகரித்தால், நான் அதிபர் பதவியை விட்டு விலகுவேன். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். பொறுத்திருங்கள். 2021, ஜன., 20க்குள் ஏராளமான விஷயங்கள் நடக்கும்' என்றார். எலக்டோரல் காலேஜ் கூட்டம், டிச.,14ல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜோ பைடன் வெற்றி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பயணியருக்கு புதிய வழிமுறை

ரோம்: ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோமில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நெவார்க் மற்றும் அட்லான்டா விமான நிலையங்களில் இருந்து வரும் பயணியருக்காக, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கிருந்து பயணிப்போர், வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து, அதன் சான்றிதழை காண்பித்தால், தொற்றால் பாதிக்கப்படாத பயணியர், 14 நாட்கள் தனிமை முகாமில் தங்க வேண்டிய அவசியமில்லை.

அமெரிக்க ஊழியர்களுக்கு சிறை

கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலா அரசின் எண்ணெய் நிறுவனத்தால் நிர்வகிக்கப் படும், 'சிட்கோ' என்ற சுத்திகரிப்பு தொழிற்சாலை, அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆறு பேர், மூன்று ஆண்டுகளுக்கு முன், வேலை காரணங்களுக்காக வெனிசுலாவிற்கு வந்தனர். பின், ஊழல் குற்றச்சாட்டுகளில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கர்கள், ஆறு பேரையும், குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்கூட்டியே உதிரும் இலைகள்

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள முனீச் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், மரங்களில் ஏற்படும் இலை உதிர்வு குறித்து, ஆராய்ச்சி ஒன்றை நடத்தினர். அதில், பருவநிலை மாற்றம் காரணமாக, இலை உதிர்வு காலத்தில் மாற்றம் ஏற்படும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2100ம் ஆண்டிற்குள், வெப்ப மண்டலங்கள் மற்றும் துருவப் பகுதிகளில் உள்ள, சில மரங்களின் இலைகள், மூன்று முதல் ஆறு நாட்கள் முன்கூட்டியே உதிரத் துவங்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.

துாதரகத்திற்கு வெளியே போராட்டம்

நியூயார்க்: மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து, நேற்று முன்தினத்துடன், 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்தியாவில், 12ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திற்கு வெளியே, போராட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும், அவர்கள் முழக்கமிட்டனர். 'டைம்ஸ்' சதுக்கத்திலும், சிலர் போராட்டம் நடத்தினர்.

ஆஸ்திரேலிய மதுவுக்கு வரி உயர்வு

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக உள்ள சீனா மீது, குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் ஆஸ்திரேலியா, அது குறித்து, விசாரணை நடத்தவும் வலியுறுத்தி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, அங்கிருந்து, சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானத்திற்கு, இறக்குமதி வரியை உயர்த்தி, சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

வட கொரியாவில் மரண தண்டனை

சியோல்: கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து, பொருளாதார பாதிப்பை சரிசெய்ய, அதிபர் கிம் ஜங் உன், கொடூரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக, அன்னிய பணப் பரிமாற்ற விகிதம் கடும் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமான, மூத்த அதிகாரி ஒருவருக்கு, கடந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்த நபருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

10 லட்சத்தை கடந்தது பாதிப்பு

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், கடந்த ஒரே நாளில், 22 ஆயிரத்து, 806 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை, 10 லட்சத்து, 6,394 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 586 ஆக அதிகரித்து உள்ளது.

மண்ணுடன் வரும் விண்கலம்

டோக்கியோ: கிழக்காசிய நாடான ஜப்பானில், 2014ம் ஆண்டு, 'ஹயாபுசா - 2' என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து, 30 கோடி, கி.மீ., தொலைவில் உள்ள, 'ரியுகு' என்ற சிறுகோளை ஆய்வு செய்ய, அந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சிறுகோளில் இறங்கி, மண் மாதிரிகளை சேகரித்தபின், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பூமிக்கு புறப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு பின், ஹயாபுசா - 2 விண்கலம், அடுத்த மாதம் பூமிக்கு திரும்ப உள்ளது. ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில், வரும் டிச., 6ம் தேதி தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை