முறையற்ற செயல்! ராஜ வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பு: ஆண்டிபாளையம் குளம் மாசுபடும் அபாயம்

தினமலர்  தினமலர்
முறையற்ற செயல்! ராஜ வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பு: ஆண்டிபாளையம் குளம் மாசுபடும் அபாயம்

திருப்பூர்:மங்கலம் பகுதியில், ஆண்டிபாளையம் குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்காலில், சாக்கடை கழிவுநீர் கலப்பதால், துாய்மையான குளம் பாழாகும் அபாயம் உருவாகியுள்ளது.
திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளம், சாக்கடை கழிவுநீர் கலக்காத துாய்மையான குளம் என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் பலமுறை பாராட்டியுள்ளது.மாநகராட்சி எல்லையில் உள்ள குளத்துக்கு, மங்கலம் நொய்யல் தடுப்பணைகளில் இருந்து, இரண்டு வாய்க்கால் மூலம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.
நல்லம்மன் தடுப்பணையில் இருந்து வரும் ராஜவாய்க்காலில், மங்கலம் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. மண் வாய்க்காலாக இருந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது.அவிநாசி ரோட்டின் இருபுறமும், கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் செல்லும் கழிவுநீர், நேரடியாக ராஜவாய்க்காலில் கலந்து, மாசு ஏற்படுத்துகிறது.
விவசாயிகள் கூறியதாவது:தன்னார்வ அமைப்பினரின் முயற்சியால், ஆண்டிபாளையம் குளம் பராமரிக்கப்படுகிறது. மேற்குபகுதியின் நீராதாரமாக இருக்கும் குளத்தில், மங்கலம் கழிவுநீர் தேங்கும் அபாயம் உருவாகியுள்ளது.சில மாதங்களுக்கு முன்புதான், குடிமராமத்து திட்டத்தில், வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டன.நெடுஞ்சாலைத்துறை கால்வாய்க்கு சரியான வடிகால் இல்லாததால், கழிவுநீர் ராஜவாய்க்காலில் கலக்கிறது.
முதல்வரின் குடிமராமத்து திட்டத்தில், நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் நிலையில், மங்கலத்தில் மட்டும் இப்படி அட்டூழியம் நடக்கிறது.கலெக்டர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ராஜவாய்க்காலின் கீழ் சுரங்கப்பாதை அமைத்து, கழிவுநீரை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, நெடுஞ்சாலை துறை அவிநாசி உட்கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரிடம் கேட்டபோது, ''ரோடு சேதமாகாமல் இருக்க, மழைநீர் வடிகால் கட்டப்பட்டது; ராஜவாய்க்காலுக்கு முன்பாகவே நிறுத்திவிட்டோம். கழிவுநீர் பிரச்னையை மங்கலம் ஊராட்சி தான் சரிசெய்ய வேண்டும்,'' என்றார்.
கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கழிவுநீர் தொடர்பாக ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது.பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பேசி, சிறிய சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

மூலக்கதை