தேங்காய் விலை 'தெறிக்க' விடுகிறது! வெங்காயம் போல் வேலையை காட்டுது

தினமலர்  தினமலர்
தேங்காய் விலை தெறிக்க விடுகிறது! வெங்காயம் போல் வேலையை காட்டுது

பேரூர்:தேங்காய் விலை, நான்கு ஆண்டுகளுக்கு பின், உச்சம் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலில் பயன்படும் பொருட்களில் மிகவும் முக்கியமானது தேங்காய். 'தேங்காய் இல்லாமல் சட்டினி செய்வது எப்படி' என, கேட்காத வீடே இருக்காது.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேங்காய், கோவை மாவட்டத்தில், 8,749 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மட்டும், 4,200 எக்டர் பரப்பளவில் சாகுபடியாகி உள்ளது.தீபாவளி முதல், தேங்காய் விலை 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தீபாவளிக்கு முன்பு, விவசாயிகளிடம் இருந்து, ஒரு கிலோ தேங்காய், ரூ.30வரை கொள்முதல் செய்யப்பட்டது.தற்போது, இருப்பு தேங்காய் கிலோ, ரூ.44க்கும், பச்சை தேங்காய், ரூ.42க்கும் கொள்முதலாகிறது. சில்லறையில் தரமான தேங்காய், ரூ.50க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை ஏற்றம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய கால ஆட்சியாளர்களை வெங்காயம் அலறவிட்டதைப் போல், வரும் தேர்தலில் தேங்காயும் ஒரு கை பார்த்துவிடும் என்கின்றனர் விவசாயிகள்.
தேங்காய் வியாபாரி நந்தகோபால் கூறுகையில், ''பனி அதிகரித்து வருவதால், காய்ப்பு திறன் குறைந்து, பெருமளவில் வரத்து சரிந்து விட்டது. கார்த்திகை மாதமும் துவங்கியதால், டன்னுக்கு, ரூ.5 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ளது,'' என்றார்.

மூலக்கதை