கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடல் நல்லடக்கம் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு பிரியாவிடை கொடுத்தனர்

தினகரன்  தினகரன்
கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடல் நல்லடக்கம் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு பிரியாவிடை கொடுத்தனர்

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் டீகோ மரடோனா இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தங்களின் மனங்கவர்ந்த நாயகனுக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நட்சத்திர வீரர் மரடோனா (60). அர்ஜென்டினா அணி 1986ல் உலக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். தாய்நாட்டு அணிக்காக 4 முறை உலக கோப்பையில் விளையாடியதுடன், இத்தாலியின் நேபோலி கிளப் அணிக்காகவும் திறைமையை வெளிப்படுத்தி அசத்தியவர். ஓய்வு பெற்ற பின்னர் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மூளையில் ரத்தம் உறைந்து பாதிப்பு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறைந்த கால்பந்து ஜாம்பவானின் உடல், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் பெல்லா விஸ்டா கல்லறையில் பெற்றோரின் சமாதிகளுக்கு அருகே நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 30க்கும் குறைவானவர்களே பங்கேற்றாலும், இறுதி ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கண்ணீர் மல்க தங்களின் மனங்கவர் நாயகனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.சில இடங்களில் கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு திரண்டதால் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் புல்லட்களால் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியும் கட்டுப்படுத்தினர். முன்னதாக, அர்ஜென்டினா அதிபர் மாளிகை முன்பாக மரடோனாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது தேசியக் கொடியை போர்த்தி, அவரது 10ம் எண் சீருடையையும் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இத்தாலியின் நேபோலி கிளப் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.இந்த கிளப் அணிக்காக மரடோனா 7 ஆண்டுகள் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், மரடோனா என்ற மகத்தான வீரனின் அசாத்தியமான திறமை கால்பந்து வரலாற்றில் என்றென்றும் போற்றிப் புகழப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மூலக்கதை