சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை, டிப்ளமோ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இல்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை, டிப்ளமோ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இல்லை

புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை, டிப்ளமோ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப்பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்திய மருத்துவக் குழுவின் 2000ம் ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.   அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஷியாம் தவான் ஆகியோர் வாதிடுகையில், ‘நடப்பாண்டு படிப்புகளுக்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட தகவல் ஏட்டில் (பிராஸ்பெக்டஸ்) இடஒதுக்கீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பணிகள் தலைமை இயக்ககம் மூலம் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநில அரசு 50 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை வெளியிடுவது முரண்பாட்டையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும், ஒரு வழக்கில் சூப்பர் ஸ்பெஷாலிடி படிப்புகளில் இடஒதுக்கீடு கூடாது என கோரப்பட்டுள்ளது.

இதனால், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டனர்.

மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களுக்கு ஆதரவாக வாதிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மனுக்கள் மீதான உத்தரவை நீதிபதிகள் அமர்வு இன்று (நவ.

27) ஒத்திவைத்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

மத்திய அரசின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. வரும்காலத்தில் மத்திய, மாநில அரசு, இந்திய மருத்துவ குழு ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

தமிழக அரசு மற்றும் பொதுநல மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்தனர்.

.

மூலக்கதை