3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்

சென்னை: நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரை உடைந்ததால் பெரும்புதூர், முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் மற்றும் வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் கடந்த 3 நாட்களாக தண்ணீரில் மூழ்கி உள்ளதால், மின்தடையும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

உணவு, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரிக்கும் - மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது 140 கி. மீ.

வேகத்தில் சூறாவளி காற்று வீசியதுடன், மிக அதிக கனமழையும் பெய்தது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மட்டும் 31 செ. மீ.

மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

அந்த பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் 4 முதல் 5 அடிக்கு தண்ணீர் ஆறாக ஓடியது. வரதராஜபுரம், முடிச்சூர், ராயப்பாநகர், வேளச்சேரி, தரமணி, செம்மஞ்சேரி, வியாசர்பாடி, பெரம்பூர், திருவொற்றியூர், கே. கே. நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்பட்சமாக 8 அடி வரை தண்ணீர் தேங்கியது.

இதனால், பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இவர்கள் தரைதளத்தை காலிசெய்து விட்டு முதல் மற்றும் 2வது மாடியில் தஞ்சம் புகுந்தனர். பலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

அந்த பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் வீடுகள் இன்று 3வது நாளாக தண்ணீரில் மிதக்கிறது.

பெரும்புதூர் அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் ராயப்பா நகர், விஜய் நகர், மஞ்சு பவுண்டேசன், அமுதம் நகர், சுந்தர் நகர், செல்வா நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், ஜெகதீஸ்வர் நகர், விமல் நகர், கருமாரியம்மன் நகர் உள்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியை ஒட்டியபடி அடையாறு கால்வாயின் கரைகள் உள்ளன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் நிவர் புயல் காரணமாக, இங்குள்ள அடையாறு கால்வாயின் கரைகள் உடைந்தன. இதனால் 20க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அங்கு வசித்தவர்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை. மேலும், வீடுகளை விட்டு வெளியேற முடியாத மக்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுகூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய, ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை மீட்பு பணிகளில்கூட ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், இங்குள்ள மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

2015ம் ஆண்டு கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டபோதும், முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பாநகர், மணிமங்கலம் ஆகிய இடங்களில் ஊருக்குள் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது.

இதையடுத்து தமிழக அரசு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி அடையாறு ஆறு செல்லும் வாய்க்கால் பகுதிகளை பல கோடி ரூபாய் செலவு செய்து சீரமைத்தது. மேலும் மழை நீர் வெளியேற பல்வேறு புதிய வசதிகளை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டதுடன், ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.

ஆனாலும், தற்போது பெய்த 31 செ. மீ. மழைக்கும், செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதாலும் மீண்டும் அதே பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இப்படி கோடி கோடியாக செலவு செய்தும் வீண் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சரியாக திட்டமிடாமல் செய்கின்ற பணிகளால், ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் நாங்கள் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுவதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னையை ஒட்டியுள்ள வேளச்சேரி, தரமணி, செம்மஞ்சேரி உள்ள பகுதிகளும், நகரின் முக்கிய பகுதிகளான கே. கே. நகர், மாம்பலம், வியாசர்பாடி, பெரம்பூர், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கொசுக்கடியிலும், மின்சாரம் இல்லாமலும், தூக்கமில்லாமல் தவித்தனர்.

அவர்கள் பலர் வீட்டை காலி செய்தாலும், மேலும் சிலர் காலி செய்ய முடியாமல் வீட்டில் தூங்காமல் மாடியில் தங்கியிருந்தனர். வீடுகளுக்குள் இருந்த டிவி, பிரிட்ஜ், வாசிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தண்ணீர் புகுந்து வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும், சாப்பாடு இல்லாமலும் கஷ்டப்படுகின்றனர். கடந்த 3 நாட்களாக சுமார் ஒரு லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் அரசு மின்னல் வேகத்தில் அதிகாரிகளை முடுக்கிவிட்டு தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை