வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை: ஜனவரி 14, 15ல் செயல்படாது

தினகரன்  தினகரன்
வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை: ஜனவரி 14, 15ல் செயல்படாது

புதுடெல்லி: வரலாற்றில் முதல் துறையாக உச்ச நீதிமன்றத்துக்கு ஜனவரி 14, 15ம் தேதிகளில் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தமிழர்களின் முதல் முக்கிய பண்டிகையாக கருதப்படுவது பொங்கல். உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான தமிழர்கள் வழக்கறிஞர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றிய போதிலும், அதற்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்பது கிடையாது. பொங்கல் தினத்தன்றும் உச்ச நீதிமன்றம் செயல்படும். இந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அடுத்தாண்டு ஜனவரி 14, 15ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஆண்டுக்கு 191 நாட்கள் மட்டுமே செயல்படும். மற்ற 174 நாட்கள் விடுமுறையில் இருக்கும். மேலும், வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், அனைத்து இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை விடப்படும். அதேபோல், தமிழர் திருநாளான பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை அடுத்தாண்டு நிறைவேறுகிறது. இதற்கு, பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மூலக்கதை