சீன பொருட்களுக்கு தடை, உலோக விலை உயர்வால் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி விலை அதிகரிக்கும் அபாயம்: வாகனங்களும் தப்பவில்லை

தினகரன்  தினகரன்
சீன பொருட்களுக்கு தடை, உலோக விலை உயர்வால் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி விலை அதிகரிக்கும் அபாயம்: வாகனங்களும் தப்பவில்லை

புதுடெல்லி: ஸ்டீல், தாமிரம், அலுமினியம் உட்பட உலோகங்கள் விலை அதிகரிப்பு மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தடையால், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலை  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 16.5 சதவீதம், பாமாயில் விலை 9 முதல் 15 சதவீதம் என அதிகரித்துள்ளது. இதுபோன்ற விலை உயர்வுகள் பொதுமக்களை நேரடியாக பாதித்து வருகின்றன. இதுபோல், கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட உலோகங்களின் விலை உயர்வும், நுகர்வோர் தலையில்தான் விடிய இருக்கிறது. அதாவது, ஸ்டீல், அலுமினியம், தாமிரம், துத்தநாகம், காரீயம் ஆகிய முக்கிய உலோக பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5 முதல் 11 சதவீதம்  அதிகரித்து விட்டது.இதனால், ஆட்டோமொபைல் துறையில் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை சில உயர்ந்து வருகின்றன. அசோக் லேலண்ட் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரையிலும், டிவிஎஸ் மோட்டார்ஸ் சுமார் 1 சதவீதம் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள் விலையும் உயர உள்ளது. இதுகுறித்து உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில உதிரி பாகங்களுக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் தடையால் இவற்றை இறக்குமதி செய்ய இயலவில்லை. ஆனால் லேப்டாப், டிவி, வாஷிங் மெஷின் தேவைகள் அதிகமாகவே உள்ளன. உலோக மூலப்பொருட்கள் மற்றும் சில உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்து விட்டது. பண்டிகை சீசனில் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு விலை உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்த பளுவை தாங்க முடியாது. இன்னும் ஒரு மாதத்திலேயே கூட இந்த விலை உயர்வு இருக்கலாம். ஏசிக்களுக்கு 2 சதவீதம் வரை விலை உயர்வு உட்பட, டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விலை 3 முதல் 5 சதவீதம் வரை உயரலாம். ஒரு மாதத்திலேயே கூட இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்றனர்.

மூலக்கதை