சர்வதேச கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: ஒரே சமயத்தில் 3 தொடர்கள்

தினகரன்  தினகரன்
சர்வதேச கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: ஒரே சமயத்தில் 3 தொடர்கள்

சிட்னி: கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான போட்டி உட்பட இன்று ஒரே நாளில் மூன்று போட்டித் தொடர்கள் தொடங்குவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. கொரோனா பீதி காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் முதல் நிறுத்தப்பட்டன. பின்னர் ஜூலை 8ல் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. முதல்முறையாக ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்குகளில் போட்டிகள் நடந்தன.தொடர்ந்து இங்கிலாந்து-அயர்லாந்து, அயர்லாந்து-பாகிஸ்தான், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்-ஜிம்பாப்வே என போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. அதிலும் சிபிஎல்(கரிபீயல் பிரிமீயர் லீக்), ஐபிஎல் என உள்ளூர் டி20 போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளன. சவாலான சுற்றுப்பயணம்: ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இடையிலான போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டு, தற்போது தொடங்குகிறது.மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா விளையாட இருந்தது. முதல் ஆட்டம் மழை காரணமாகவும், எஞ்சிய 2 ஆட்டங்கள் கொரோனா பீதி காரணமாகவும் கைவிடப்பட்டன. இந்தியா அதற்கு முன்பு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது நியூசி.க்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட்தான் (பிப்.29-மார்ச்2) இந்தியா விளையாடிய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி. சரியாக 269 நாட்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது.அதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அங்கு 3 டி20, 3 ஒருாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய நேரப்படி ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாகவும், டி20 போட்டி வழக்கம் போல் இரவு நேர ஆட்டங்களாகவும் நடக்க உள்ளன. அதேபோல் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்க உள்ளது. வெளிநாட்டில் முதல்முறையாக பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 2019 இறுதியில் வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்துள்ளது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியினர் அந்நாட்டு விதிகளின்படி தனிமைப்படுத்துதலை முடித்துள்ளனர். மீண்டும் கொரோனா சோதனைக்கு பிறகு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இன்று சிட்னியில் முதல் ஒரு நாள் போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய நேரப்படி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றாலும், இந்திய நேரப்படி இன்று காலை 9.10 மணிக்குதான் ஆட்டம் தொடங்கும். இந்த 2 அணிகளும் இந்தியாவில் 2020 ஜனவரியில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் கடைசியாக விளையாடி உள்ளன. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் இந்தியாவும், 2 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. கூடவே 2018-19ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரையும் இந்தியாதான் 2-1 என்ற கணக்கில் கைபற்றியது.அதனால் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உற்சாகமாகவே களம் காணும். கோஹ்லி, தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஆகியோர் பேட்டிங் வரிசையில் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால் கடந்த 2 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய ரோகித் சர்மா அணியில் இல்லாதது இழப்பாகவே இருக்கும். அதேபோல் 2019 ஆஸி. தொடரில் விளையாடிய டோனியும் இப்போது அணியில் இல்லை.அதே நேரத்தில் 2018-19 ம் ஆண்டு ஆஸி. பயணத்தில் இந்தியா ஒருநாள், டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியதற்கு பதிலடி தர ஆஸ்திரேலியாவும் தீவிரமாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் சதங்கள் விளாசினர். கூடவே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி பெற்றது. இவர்கள் மட்டுமின்றி ஸ்மித், கம்மின்ஸ், அலெக்ஸ் கேரி என வலுவான பேட்டிங் வரிசையை ஆஸி. வைத்திருக்கிறது.ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தர வரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4வது இடத்திலும் இருக்கின்றன. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், ஜஸ்பிரித் பும்ரா, யஜ்வேந்திர சாஹல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷூப்மன் கில், ஷர்துல் தாகூர். ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டா ர்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா.

மூலக்கதை