வளர்ச்சி பாதிப்பதை தடுக்க இந்தியாவின் ஒரே தேவை ஒரே நாடு; ஒரே தேர்தல்: சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
வளர்ச்சி பாதிப்பதை தடுக்க இந்தியாவின் ஒரே தேவை ஒரே நாடு; ஒரே தேர்தல்: சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

கெவடியா: ‘‘சில மாதங்கள் இடைவெளியில் அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சி பணிகளை பாதிப்பதால், இந்தியாவில் தற்போதைக்கு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மட்டுமே தேவை,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம், கெவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையின் அருகே ‘அகில இந்திய சபாநாயகர்கள் 80வது மாநாடு’ நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். 2ம் நாளான நேற்று, இதில் காணொலி மூலமாக  கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: மக்களவை, சட்டப்பேரவை, பஞ்சாயத்து தேர்தல் என ஒவ்வொரு தேர்தலுக்கும் தனித்தனி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதால் வீண் செலவு ஏற்படுகிறது. நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு, நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசியலில் நாடு அல்லது மக்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற சூழ்நிலை வரும் போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும். அதனால்தான், சர்தார் சரோவர் அணை கட்டி முடிக்கப்படாமல், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்திருந்தால், இந்த பணி எப்போதோ முடிந்திருக்கும். ஆனால், இத்திட்டத்தை தொடங்கியவர்கள் இதற்காக வருத்தப்படவில்லை.அதே போல், அரசியலில் ஒரு தலைவரை ஒதுக்கக் கூடாது. அதனால்தான், சர்தார் வல்லபாய் படேல் பாஜ.வையோ அல்லது ஜன சங்கத்தையோ சேர்ந்தவராக இல்லா விட்டாலும் கூட, அவருக்காக ஒற்றுமை சிலை நிறுவப்பட்டது. ஒவ்வொரு முறையும் சில மாதங்கள் இடைவெளியில், பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதனால், நாட்டின் வளர்ச்சி பணிகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது விவாதத்துக்குரிய விஷயமே அல்ல. இந்தியாவின் ஒரே தேவையாகும். இவ்வாறு பிரதமர் பேசினார்.* சீரம் நிறுவனத்தில் நாளை பார்வைபுனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இந்தியா நிறுவனம், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு பிரதமர் மோடி நாளை சென்று, தடுப்பூசி உற்பத்தியை நேரடியாக ஆய்வு செய்கிறார். இது குறித்து அந்நிறுவனத்தின் புனே பிரிவு தலைவர் சவுரப் ராவ் கூறுகையில், ``பிரதமர் மோடி நாளை வருகை தருவது உறுதியாகி உள்ளது,’’ என்றார். * மும்பை தாக்குதலை இந்தியா மறக்காதுஇந்த நிகழ்ச்சியில் பேசும் போது, மும்பை தீவிரவாத தாக்குதலின் 12வது ஆண்டை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, ``மும்பை தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத  தாக்குதலாகும். இதை இந்தியா ஒருபோதும் மறக்காது. புதிய கொள்கைகளுடனும்,  புதிய வழிமுறைகளுடனும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா போரிட்டு  வருகிறது,’’ என்றார்.

மூலக்கதை