நிவர் புயலால் சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன

தினமலர்  தினமலர்
நிவர் புயலால் சென்னையில் 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன

சென்னை: சென்னையில் புயல் காரணமாக, 24 மணி நேரத்தில், 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

'நிவர்' புயல் கரையை கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை, பல்வேறு வகையான, 267 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதில், நேற்று முன்தினம் மாலை வரை, 100க்கும் குறைவான அளவில் மரங்கள் சாய்ந்தன.இரவில் அடித்த காற்றினால், 150க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. இந்தாண்டில் இதுவரை, சென்னையில் மட்டும், 609 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

களத்தில் போலீசார் தீவிரம்சென்னையில், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம், ராயப்பேட்டை, சூளைமேடு, மாதவரம், அண்ணா சதுக்கம் என, பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் போலீசார், 102 இடங்களில் விழுந்த பெரிய மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

மரங்கள் விழுந்ததால், ஏழு கார்கள் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தன.இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:புயல் மற்றும் மழை நிவாரண உதவிக்கு, மக்கள், அவசர போலீஸ் எண்: 100 மற்றும் 94981 81239 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு அழைக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களுக்கு, 1,000க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டனர். இவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை